Monday, February 9, 2009

"நான் கடவுள்"- ரெளத்ர தாண்டவம்.

"நான் கடவுள்" பாலா+இளையராஜா +ஆர்யா கூட்டணி ஆடியிருக்கும் ரெளத்ர தாண்டவம். "சேது" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தை வேறு பாதைக்கு இழுத்து சென்றவர் இயக்குநர் பாலா. இந்திய திரையுலகமே வியக்கும் இயக்குநர் மணிரத்னம், அவர் வியந்த தமிழ் இயக்குநர் பாலா. இன்றைய தமிழ் சினிமாவில் புது முயற்சிகள் செய்ய துணியும் இயக்குநர்களிடம் கண்டிப்பாக பாலாவின் பிரதிபலிப்பை காணலாம். இப்பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான பாலா மூன்று வருடகாலமாக உழைத்து செதுக்கியதே இந்த "நான் கடவுள்". தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்காத பக்கங்களை, தன் படைப்புகளில் கொண்டுவருவதே பாலாவின் திறமை. நமக்கு புலப்படாத நம் கண்ணுகெட்டின தூரத்தில் வாழும் பிச்சைக்காரர்களின் வாழ்வியலையும், நம்மில் பலர் பார்த்திராத புனித காசியின் சூழலையும் பிணைத்து நம்மை உறைய வைக்கிறது இந்த "நான் கடவுள்" படைப்பு.

ஜோதிடக்காரனின் பேச்சைக்கேட்டு பதினாலு வருடம் தனது மகனை பக்கத்தில் வைக்கக்கூடாது என்பதற்காக காசியில் கொண்டுபோய்விட்ட தந்தை, பதினாலு வருடம் கழித்து அவனை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வருகிறார். வீட்டினரோடு ஒட்டாமல் நான் கடவுள் என்று திரிகிற அவன், வாழ தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் தண்டனையும், வாழ இயலாதவர்களுக்கு கொடுக்கும் வரமுமே படம்.

அஜீத், மீரா ஜாஸ்மின், பாவனா, கார்த்திகா என பலர் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விலக்கப்பட்டனர். கடைசியில் ஆர்யா, பூஜாவிற்கு கிடைத்தது இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு. இனி இவர்கள் வாழ்நாளில் இவர்கள் மறக்கமுடியாத வாய்ப்பு.

ஆர்யா, பூஜா, ஆர்யாவின் தாய் உள்ளிட்ட ஒரு சிலரே ஏற்கனவே நமக்கு அறிமுகமான நடிகர்கள், மற்றவர்கள் யாவரும் புதுமுகங்கள். குறிப்பாக தமிழ் திரையுலகம் எப்போதும் கேலிக்கூத்தாக சித்தரிக்கும் திருநங்கை கதாப்பாத்திரத்தில் நிஜ திருநங்கை.

வளர்ந்த தலைமுடி, முகம் நிறைய தாடி, கஞ்சா, கண்களில் மிரட்டும் பார்வை என ஆர்யாவை கண்டதும் படத்தில் வருகிற கதாபாத்திரங்கள் மட்டுமல்ல நாமும் பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் அறிமுக காட்சியில் தலைகீழாக நிற்கும்போதும், கஞ்சா அடிக்கையிலும், மற்றோரை மிரட்டுகையிலும் ரொம்பவே மிரட்டி இருக்கிறார். அதிகம் வசனம் இல்லாத இந்த கதாபாத்திரத்தை இனி கண்டிப்பாக ஊர் பேசும். மூன்றுவருடம் காத்திருந்ததற்கு நல்ல பலன் என்பது படம் முடிகையில் தெரிகிறது.

அடுத்ததாக பூஜா, இனி ஒரு கதாப்பாத்திரம் இப்படி இவருக்கு திரையுலகில் அமைவது மிக மிக கடினம். நிஜ ஊனமுற்றோர்களுக்கு மத்தியில் இவரும் இரண்டர கலந்திருப்பதே இவரின் கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி. அதுவும் கடைசி காட்சியில் அவரை நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் பாலா.

இந்தப் படத்தில் அடுத்ததாக குறிப்பிட வேண்டியது பிச்சை எடுக்க வைக்கப்படும் அந்த ஊனமுற்றவர்களின் கதாப்பாத்திர படைப்புகள் மற்றும் நடிகர்கள். விதவிதமான வேடங்களில் நம்மை தொந்தரவு செய்து பிச்சை எடுப்பர்களின் சூழல் நம்மை உறைய வைக்கும் அளவிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக இளையராஜாவின் பிண்ணனி இசை, மிரட்டுகிறபாணியில் ஆர்யா நடந்து வருகையிலும், உடுக்கையோடு ஆர்யா செய்யும் அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும் ராஜா பிண்ணி எடுத்திருக்கிறார். ஒலிநாடாக்களில் கேட்ட "மாதா உன் கோவிலில்" பாடல் படத்தில் பயன்படுத்தபடவில்லை என்றபோதும், "ஓம் சிவ ஓம்" பாடலும், அதை பதிவு செய்த விதமும் அருமை.

ஆர்தர் வில்சனின் கேமரா காசியை படம்பிடித்தவிதம், ஆர்யாவின் அறிமுக காட்சி, கடைசி சண்டைக் காட்சி என நீட்டிக்கொண்டே போகலாம் இவர் நிருபித்த இடங்களை. கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியின் கலையும் ரொம்பவே கை கொடுத்துள்ளது. முக்கியமாக அந்த பிச்சை எடுப்பவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த இடம்.

வெகுஜன சினிமாக ரசிகர்களை இது இழுக்குமா என்பதற்கு விடைதெரியாவிட்டாலும், கலை ரசிகர்களுக்கு நல்ல ரசனையான படைப்பு. தமிழ் சினிமா மார்த்தட்டிக்கொள்ள வேண்டிய முக்கியமான படைப்பு.