Monday, December 24, 2012

அன்புள்ள தர்மலிங்கம் ஆசிரியருக்கு...


"உன் கட்டபொம்மன் மீசையை கொஞ்சம் டிரிம் பண்ணுடா" என யாராவது சொன்னால் எனக்கு சட்டென உங்கள் நினைவுதான் வந்து போகும்... ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே நான் உங்களிடம் ரசித்தது உங்கள் மீசையைத்தான்... இன்று கால்குலேட்டரை பயன்படுத்தாமல் கணக்கு போடும் ஒவ்வொரு முறையும், உங்களிடம் பாராட்டு வாங்க அவசர அவசரமாக கணக்கு பாடங்களை முடிக்கும் நாட்களை நினைத்து பார்க்கிறேன்... அப்பாவின் கண்டிப்பை உணராத எனக்கு முன்னுரை எழுதியது உங்கள் பூவரசமர குச்சிகள்தான்...


ஒருநாள் அம்மாவின் அலைபேசி ஊடாக நீங்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தி வந்தது... நான் நம்மவில்லை... என் ஆளுமையின் அஸ்திவாரம் நீங்கள்... என்னில் ஒரு ஆசிரியன் எட்டிப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் நீங்கள் இருப்பதை உணருகிறேன்... அப்படியே இருந்துவிட்டு போகிறேன்...

அம்மாவின் அலைபேசி...அம்மாவிற்கு அலைபேசி ஒன்றை சமீபத்தில் வாங்கிக் கொடுத்தேன்... தினமும் தவறாமல் அம்மாவிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது... "தம்பி பொட்டவத்திலேர்ந்து செல்லு கீழே விழுந்திருச்சுய்யா, எதுன்னா ஆயிறுமா?" "எத்தனை நாளைக்கு ஒருதரம் சார்ஜ் போடணும்?" "100 ரூபாய்க்கு போட்டா காசு எவ்வளவு ஏறும்யா?" என ஒரு குழந்தையாய் மாறி அம்மா கேள்வி கேட்கிறாள். அம்மாவின் சந்தேகங்கள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பல வேளைகளில் சிந்தனையை தூண்டுகிறது...தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு அலைபேசியை பற்றி அறிந்து கொள்ளவே அம்மா இவ்வளவு கேள்விகள் கேட்கும்போது, இந்த உலகத்தை பற்றி அறிந்துக் கொள்ள அம்மாவிடம் நான் எத்தனை கேள்விகள் கேட்டு இருப்பேன்... 
உண்மையில் அம்மாக்கள்தான் முதல் பல்கலைகழங்கள்... 
ஐ லவ் யூ அம்மா.............

அம்மாவும் செவலை மாடும்...அம்மாவுக்கும் இந்த செவலை மாட்டிற்குமுள்ள பந்தம் அளப்பரியது. அம்மா வீட்டை பூட்டும் ஓசை கேட்டாலே 'அம்மா'வென அலறும் இந்த செவலை மாடு. அந்த அலறலில் 'என்னைவிட்டு எங்கேயடி போகிறாய்' என்ற கேள்வியும் கெஞ்சலும் பிணைந்திருக்கும். "நான் போயிட்டு வர்ற வரைக்கும் சத்தம் போடாம இருக்கணும், என்ன?" என்கிற அம்மாவின் சமாதானத்தை அது எப்போதும் ஏற்றுக் கொள்வதேயில்லை என்பதை அம்மா வெளியேறியதும் அதன் அலறலை கேட்கும் அக்கம் பக்கத்தாருக்கு தெரியும். அம்மா வீடு திரும்புகையில் 'அம்மா'வென ஆர்பரிக்கும் அதன் சத்தத்தில் சொல்லிலடங்கா ஆனந்தம் நிறைந்து கிடக்கும். 


"ஏன்ந்தா இந்த மலட்டை வெச்சுக்கிட்டு மாரடிக்கிற? பேசாம வித்துப்புட்டு, சாணி கரைச்சு போடுறதுக்குத் தோதா ஒரு சின்ன கண்ணுக்குட்டியா வாங்கிக்கோ" என சில ஆண்டுகளாக சினையாகாததைப் பற்றி யார் நினைவுறுத்தினாலும், "அப்புடியெல்லாம் சொல்லாதீக ஆயி... கண்ணுக்குட்டியிலேர்ந்து வளத்துகிட்டு வர்றேன்... அதுவும் எனக்கு ஒரு கொழந்ததானே?" என தாயாய் மாறுவாள் அம்மா. "அதோட ஒத்த கண்ணுக்குட்டிகூட கட்டுத்தறியில தங்கலல... நாலும் ஒரொரு வருஷத்தகூட தாண்டல" என என்னிடம் கண்ணீர் வடிப்பாள். "உன் சாதகத்துலதான் மாடு கண்ணு தங்காதாம், சின்னபய சாதகம் ஸ்ஸ்ட்ராங்காம்' என அத்தனை பழியையும் என்மீது போடுவாள். ஆனால் அத்தனை நாளைக்கு அந்த பந்தம் நீடிக்கவில்லை. மாட்டை விற்கும் ஒரு நேரமும் வந்தது. தாலி கயிறுபோல் அம்மா செவலைமாட்டிற்கு கட்டிய கயிற்றை வியாபாரி அவிழ்த்து தந்தபோது அம்மா உடைந்து போய்விட்டாளாம். 'அம்மா'வென்று அது அலறும் சத்தத்தை கேட்க துணிவில்லாமல் பெரியம்மா வீட்டிற்கு ஓடி விட்டாளாம். செவலைமாட்டை பிரிந்த சோகத்தை அம்மா அலைபேசி வாயிலாக என்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டாள். ஆனால் அம்மாவை பிரிந்த செவலை மாடு, தன் ஆதங்கத்தை யாரிடம் தீர்ததிருக்கும்??? எப்படி தீர்த்திருக்கும்??? 

என் கிழவிக்கு சமர்ப்பணம்
என் கிழவியே!!! உனக்கும் எனக்குமான இந்த உரையாடல் காணொளி, என்னைவிட உயர்வான பொக்கிஷம் என்பது உனக்கு சொல்லிதான் தெரியவேண்டுமென்பது இல்லை.

‘பாரதி’ என்கிற உச்சரிப்பில் ‘பார்வதி’ என்கிற நீ இருக்கிறாய். என் சிறுவயதில், பிடிக்க முடியாத தூரத்தில் நின்றுகொண்டு “பார்வதி என்னை பாரடி” என கிண்டல் செய்ய, “அடி வெளக்கமத்தாள” என நீ பொய்யாய் துரத்தியது இன்னும் நினைவிருக்கிறது. 

நான் பிறந்த வருடத்திலிருந்து நிலத்தை குத்தகைக்கு விடும் பழக்கம் தொற்றி கொண்டதால், என்மீதான கோபதருணங்களில் “ஏறெடுத்த தரித்திரம்” என்று என்னை திட்டித் தீர்த்து இருக்கிறாய். ஆனால்... படிப்பிலும் ஒழுங்கிலும் சிறிது பிசகினாலும் ஆர்மிக்கார அம்மா அடித்து துவைக்க ஆயத்தமாக, “அய்யோ நான் என்ன பண்ணுவேன்? என் புள்ளயலுவள கொன்னுட போறாளே” என நீ பதறுவாய். “இப்படி சப்பை கட்டு கட்டிதான் இதுகள உருப்புடாம ஆக்கிப்புட்ட” என்கிற அம்மாவின் பேச்சையும், எங்கள் மீது விழும் இரண்டு மூன்று அடிகளையும் நீ ஏற்றுக் கொள்ளும்போது, உனக்கும் சேர்த்தே நாங்கள் அழுவோம்.

சிறுவயதிலிருந்து தம்பிதான் உன் செல்லம். உன் சிற்றுண்டி பங்கில் எனக்கும் அவனுக்கும் ஒரு பங்கு கொடுப்பாய். பின்பு எனக்கே தெரியாமல் மற்றொரு பங்கு அவனுக்கு கொடுப்பாய். எப்போதாவது உங்கள் திருட்டுத்தனம் எனக்கு தெரிந்து போகும். “ ‘’யப்பா... யப்பா... மாலா கடைவரை போயி எட்டணாவுக்கு மூக்குபொடி வாங்கிட்டு வந்திட்டேன்னு’ என்கிட்ட கெஞ்சுவேல்ல? என்னைக்கு வச்சுகிறேண்டி பார்வதி” என உள்ளுக்குள் உருமி கொள்வேன். அன்றே நீ என்னிடம் கெஞ்சலாக வேண்டுகோள் வைத்து வேலை வாங்கும்போது அந்த கர்வமெல்லாம் சுக்கு நூறாகி போகும். ஆனால்..... ஒருமுறை ‘நான் சாவுறதுக்குள்ள என்ன வந்து பார்த்துட்டு போய்யா” என குழந்தையாய் மாறி அடம்பிடித்து என்னை ஊருக்கு அழைத்தாய். உன்னோடு அளவளாவிவிட்டு சென்னை புறப்பட்டபோது உன் செருவாட்டு காசுகளை எல்லாம் ஒன்று சேர்த்து ரூபாய் இரண்டாயிரத்தை என் கைகளில் நீ திணித்தாய். (அனேகமாக உன் கடைசி கையிருப்பு அதுதான் என நினைக்கிறேன்). சிறுவயதில் தம்பியின் கைகளில் திருட்டுதனமாக திணிக்கும் சிற்றுண்டி எனக்கு நியாபகம் வந்தது.

வீட்டு தாழ்வாரத்தில் முடங்கிய உன் இறுதி நாட்களில் ஒருநாள்... “கை பாக்குற வீராச்சாமியை கூட்டிக்கிட்டு வாய்யா, எத்தனை மணி நேரம் தாங்கும்னு கேட்போம்’ என்று நீ, உன் இறுதி யாத்திரைக்கு நேரம் குறித்தபோது உன் கன்னத்தில் ஓங்கி அறைந்து ‘என்னை வளர்த்து ஆளாக்கிய நீதான் என் குழந்தையையும் வளர்க்க வேண்டும் என்கிற என் ஆசையை நிராசையாக்கிவிட்டு அவ்வளவு சீக்கிரம் போக உனக்கு என்னடி அவசரம்?’ என கேட்கலாம் போலிருந்தது. ஆனால் அடுத்த நொடியே, ‘அவன் என்ன சொல்ல போறான்? இருக்கையில இருக்கும், சாவயில சாவும்னு சொல்வான்’ என்ற உன் நகைச்சுவை உணர்வு என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. 

உன்னை நான் தொலைத்து வருடம் ஒன்றாகிறது. மறைந்தவர்களெல்லாம் இறந்ததாக சொல்கிறர்கள். ஆனால் உனக்கும் எனக்கும் மட்டுமே உண்மை தெரியும், உன்னையும் என்னையும் சேர்த்து எனக்குள் நான் சுமப்பது இரண்டு ஆன்மாவென்று.

என் அன்பு தம்பியே...


என் அன்பு தம்பியே... சிறுவயதில் நீயும் நானும் எப்போதும் சண்டைகோழிகள்தான். உன்னை நான் ஒரு அடி அடித்தால், பதிலுக்கு நீ என்னை இரண்டு அடி அடிப்பாய், நான் நாலாய் கொடுப்பேன், நீ எட்டாய் தர முயற்சி செய்வாய். இதைப்பார்க்கும் அம்மா இருவருக்கும் பத்து பதினைந்து கொடுத்து அமைதியாக உட்கார வைத்து விடுவாள். 

ஒரு மழைக்காலத்தில் நம் கொடத்தடியில் காற்றில் சரிந்துபோன கொய்யா மரத்திற்கு நீயும் நானும் கருவேலம் கிளையால் முட்டு கொடுத்தோம். அப்போது உன் பாதத்தை பதம் பார்த்தது கருவேலம் முள். மருத்துவமனை செல்லும் அளவிற்கு அது உன்னை வாட்டி வதைத்தது. அந்த நாட்களில் நான் உன்னை உப்பு மூட்டையாக சுமந்து பள்ளி வரை கொண்டு சென்றேன். இதை ஒரு மழைக்காலத்தில் ஆயா நினைவுகூர்ந்து என்னை அனுசரித்து போகுமாறு அழுகையோடு உன்னிடம் வேண்டினாள்.

அவளது கூடாரத்தில் அவளுக்கு நான் பணிவிடை செய்த அவளது கடைசி நாட்களின் ஓர் இரவில், நான் உன்னை அடிப்பதுபோல கனவு கண்டு, ‘எப்பா எப்பா உன்னை கையெடுத்துக் கும்பிடுறேன்பா, அவனை அடிக்காதேப்பா. அவன் சின்ன பயல்பா" என்று கெஞ்சினாள். நான் அதிர்ந்து போனேன்.

அதன்பிறகு, அவள் நம்மைவிட்டு பிரிந்த பின்பு உனக்கும் எனக்குமான இடைவெளி குறைந்தது. இப்பொதெல்லாம் உன்னிடம் அதிர்ந்துகூட பேசுவதில்லை. நீயும் என்மீது பாசத்தை பொழிகிறாய். ‘அஞ்சு வயசில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. நீ என் வாழ்வில் கடைசி நொடிவரை என் தம்பிதான். ஏனெனில் பங்காளி பகையாளியாகும் வாய்ப்புண்டு, ஆகவே இறுதிவரை நீ எப்போதும் என் தம்பியாகவே இரு.

உன்னை உப்புமூட்டை சுமக்க வைத்த அந்த மழைக்காலத்திற்கும், நம்மை சேர்த்து வைத்த நம் ஆயாவுக்கும் இந்த மழைக்காலத்தில் நம் நன்றிகளை ஒருசேர சமர்ப்பிப்போம் வா....

Monday, August 9, 2010

தர்க்கம் (சிறுகதை) - பாரதி

கார்த்திக மாசத்து ராத்திரி பத்து மணி.. நா இப்போ டவுனுக்குள்ள இருக்குற நாடியம்மன் தேரடிக் கொட்டகைக்குள்ள ஒதுங்கி நிக்கிறேன். எப்பயாவது இந்த முக்கூடுல எரியிற தெருவெளக்கும் இன்னைக்கு கொட்டுற பேய் மழையில அணைஞ்சு கெடக்கு. கின்னு இருட்டு கிட்ட தெரியல..

விடிஞ்சா திங்க கெழம. அது அதுக வெள்ளனமா கெளம்பி சோலிக்கி போவணுமேன்னு வீட்டுக்குள்ள அடஞ்சு போயிருக்கிறதால, நடமாட்டம் இல்ல.. தவள பண்ணயலோட கச்சேரி வேற கொட்டி மொலங்குது. உசுரக்குடுத்து கத்தினாலும் ஒத்த தப்படிக்கு அங்கிட்டுக்கூட நாம கத்துறது கேக்காது போல.

நா இந்த சமயத்துல இங்க ஒதுங்கி இருக்குறது மழக்காவண்டியில்ல. மேல வீட்டு மாரியாயி சொல்லுற கதயில வர்றாபுல கண்ணுல ரவுத்துரத்த கக்கிகிட்டு கையில கத்தியோட நிக்குறேன்.

இருட்டு, மழ, தவள சத்தம், சூலாயுதத்தோட நாக்க காட்டிகிட்டு நிக்குற நாடியம்மன்... இதவிட வேற நல்ல சந்தர்ப்பம் எங்க மாட்டும் எனக்கு? இந்த பூசைக்கு, இதான் ஏத்த எடம்.

ஆமா... இன்னம் சத்த நாழியில இங்குண வந்து ரெண்டு ஜென்மம் சோடியா வந்து கொஞ்சிட்டு பிரிஞ்சு போவும். அதுங்கள சோமய்யா கடை ரொட்டி துண்டாட்டம் வெட்டி இந்த நாடியம்மனுக்கு காவு குடுக்கத்தான் நா நிக்குறேன்..

அன்னபூர்ணா தியேட்டருல ராக்காச்சி முடிச்சி, மணிகூண்டு முக்கூட்டுல இருக்குற கலப்பு கடையில திண்ணுட்டு, ரெண்டும் இங்கதான் வந்து சேருமாம், அதுக்கு பொறவுதான் அவ சாமியார்மடம் போயி வண்டி ஏறுவாளாம், இந்தாளு வடசேரி முக்கம் வந்து வண்டி ஏற்றதாம்.

நாழி ஆயிட்டே இருக்கு., வெரசா சோலிய முடிச்சுபுட்டு, கடசி வண்டி புடிச்சு ஊருக்கு போயிரனும். இல்லாட்டி கால்நடையா காட்டாத்து பாலத்த தாண்டி நாலு மைலு எப்புடி போறது?

மழயோட இப்ப காத்தும் கைக்கோர்த்துக்கிடிச்சு... உங்கமழ எங்கமழ இல்ல.. கொள்ள மழ... பண்ட ஒரு வருஷம் காத்தடிச்சு அய்யனாரு கோயிலு ஆலமரம் விழுந்திருச்சு, அந்த வருஷ மழமாரியே இருக்கு இன்னக்கு. இதுக "வரட்டும் வரட்டும்"னு கருவிகிட்டு நிக்குறேன்.

சத்த இருங்க.. ரெண்டு உருவம் வர்றமாதிரி இருக்கு. பத்து தப்படிதான் ரோட்டுக்கும், கொட்டகைக்கும்னாலும் சரிவர யாருன்னு வெளங்கல... நா அப்புடியே பின்னாடிபோயி மறையவும் ரெண்டு உருவமும் கொட்டகைக்குள்ள வந்திடிச்சு...

ம்ம்ம்ம்.... அதுகதான்...

இந்தாளு சட்டபையிலேர்ந்து அவ கைக்கு ஏதோ எடம் மாறுது. கருமாதி காசு பணமாத்தான் இருக்கும். சோலி முடிஞ்சா கூலி குடுத்துத்தானே ஆவணும். அவ மாருக்குள்ள அத பத்திரபடுத்திகிட்டு இருக்கா... இதுக்கு பொறவும் நா நாழிய கழிக்க கூடாது....

அதுங்க அசர்றதுக்கு முன்னாடியே அதுக முன்னாடி கையில கத்தியோட நின்னதும் ரெண்டும் தெகச்சு போயிருச்சு... என்னைய இந்த கோலத்துல எதிர்பாத்து இருக்காதுங்களா.

என் மொதக்குறி அந்த அழவுராணிதான்.... ஆறடுக்கு குருது கணக்கா இருந்திகிட்டு, இந்தாளு பார்வை பட்டாதான் ஒனக்கு கீழுடம்பு பிசிபிசுக்குமோ? அந்தாளுக்கே குடிச்சு குடிச்சு நெஞ்செலும்பு தேஞ்சு போய் கெடக்கு... ஆளும் மூஞ்சியும் மொகரையும் பாரு..

நா எதுவும் பேசாமலே அவளுக்கு வெடவெடன்னு நடுங்குது, வெள்ளாங்கை பக்கமா இருந்த மஞ்சபைய விட்டுட்டா... குந்தாணி நகந்து அந்தாளு தோளுக்கு பின்னாடி மறஞ்சவ என்ன பண்ணிட்டா பாருங்க.. தளவாசகாரின்னா தலைய குடுத்தாவது இந்தாளுக்காவ போராடியிருப்பா... அவ கொள்ளவாச கொலகாரியில்ல... இந்தால என் பக்கமா புடிச்சு தள்ளிட்டு ஓடிட்டா...

கப்பிகல்லு ஒழுங்கையில போற சப்பரம் கணக்கா ஒழுங்கு இல்லாம ஓடிட்டா... என் மொதக்குறி தப்பிடுச்சு... இந்தாளு எழுந்து தள்ளாடி தள்ளாடி வேட்டியா கட்டையிலதான் புரியுது ஏரிக்கர ஊறல் பானய மூக்குமுட்ட ரொப்பி இருக்குறது..

அட்ரா சக்கை..

அந்த நாடியம்மாவோட சக்தியே எனக்குள்ள வந்து பூந்த மாதிரி இருக்கு... "ஹா... ஹா..."ன்னு சிரிச்சுகிட்டு, நாக்க துருத்திகிட்டு கத்தியோட முன்னேறவும், அந்தாளு மரண பயத்தோட மருவுறாரு..

"நா நடக்குற தொனிய பாத்தா முசிறி முப்பத்தி ரெண்டு கிராமமும் பொம்புள போலிஸ்னு பட்டம் வெச்சிருக்குதுக. ஆனா நா உனக்கு முன்னாடி அடங்கி போற போட்டையாதன இருந்தேன்" ஓங்கி குத்துன மொதக்குத்து இந்தாளு மாருக்கும், வயித்துக்கும் எடையில விழுந்திருச்சு... சுதாரிச்சு கத்திய லாவகமா நா உருவிபிட்டேன்...

"வாங்குன கடனுக்கு அந்த செருக்கி மவன் நா ஒனக்கு பெத்தமவள முந்தி விரிக்க சொல்ல, பொத்தி பொத்தி வச்ச ஒத்த புள்ளையும் பால்டாயிளையும் குடிச்சுபுட்டு ஆதியன்கொள்ள கெணத்தோட உசிர முடிச்சிகிடுச்சு. ஒனக்கு சொவுசு கேட்குதுல்ல"

பின்னாலேயே போன இந்தாளு தடுக்கி ஒசரப்பன விழுந்தாப்புல விழ "ஓனக்கு பொங்கி போடத்தான் எங்களுக்கு முடிஞ்சுது, நீ அவுசாரித்தனம் பண்ண எங்க உசுரு அனாமத்தா போவனுமா?" குத்த தோது பாத்துகிட்டேன்.

"கையாலாகதவனுக்கு எதுக்கு உசிரு?" ஓலக்க இடிக்கிறாப்புல, அந்தாளு பக்கவாட்டுல ஒக்காந்து மொத்தம் இருபத்தியொரு குத்து...

நா கக்குன கோவமெல்லாம் ரெத்தமா மழத்தண்ணியோட சேந்து ஓடுது, என்கோவம் அடங்க அடங்க, குத்துன வேகம் அடங்கி தெவ தெளிய சத்த நாழி ஆச்சு...

"பத்து மாசம் பெத்தெடுக்கிறது மட்டும்தான் ஆம்புளக்கும் ,பொம்பளக்குமுள்ள வேத்தும... மத்தபடி கோவமும், வீரமும் எங்களுக்குள்ளயும் அடங்கி கெடக்கு"ன்னு எழுந்து கத்திய வீசிப்புட்டு வடசேரி முக்கத்து பக்கமா நடக்குறேன்.

கொழும்பு ஸ்டோர் பக்கமா ரெண்டு மூணு தல எனக்கு எதித்த மாதிரி வர்றாப்புல இருக்கு, முந்தானைய தூக்கி முக்காடு போட்டுக்கிட்டு என் நடைய கட்டுறேன். மாவராசன்வீட்டு மழ இன்னும் ஓயல..ஆணா பொண்ணானுக்கூட அடையாளம் தெரிஞ்சிருக்காது.

தேரடித்தேறு கடையெல்லாம் அடைச்சுக் கெடக்கு, பூக்கட சந்து பக்கமா மட்டும் அஞ்சாறு சலசலப்பு தெரியுது... நா அதையும் தாண்டி, பத்தர் கடையெல்லாம் தாண்டி போனதும் பாத்தா, வடசேரி முக்கத்துலேர்ந்து அவுளுபொறி கடை வரைக்கும் வண்டியெல்லாம் அப்புடியே ரோட்ட ரொப்பிக்கிட்டு நிக்குது.

நடுவுல நாலாம் நம்பர் வண்டி நிக்குறமாதிரி தெரியுது. விறுவிறுன்னு போயி அதுல ஏறி பின்னாடி கதவு ஓரமா ஒக்காந்ததும் கண்ணாடிக்காரன் வந்து "என்னாயி முழுக்க நனைஞ்சிட்ட போல"ங்கிறான். நா எதுவும் பேசல. முந்தானையில இருக்குற அஞ்சு ரூவா காச எடுத்துக் குடுக்கவும், சீட்டையும் சில்லரையும் குடுத்துட்டுப் போறான்.


சன்ன கதவு ஓரமா தலசாச்சு ஒக்காந்திருக்கேன். சாரக்காத்து சங்கடமா தெரியல, வாக்கப்பட்டு வந்ததுலேர்ந்து இப்ப வக்கத்தவலா நிக்குரவரைக்கும் நெஞ்சுக்குள்ள ஓடுது. அதுல முச்சூடும் அழுகாச்சி பொம்மையாதான் நா இருக்கேன். இந்த வளரோட தேஞ்சுபோன வாழ்கையில பொத்தல் பொத்தலா எத்தன அவமானம்? எத்தன அலங்கோலம்? எத்தன அசிங்கம்? எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒத்த உசுரு, அதுக்குள்ளே ஒளிஞ்சிகிட்டு இருந்த வக்கிரம்! அயோக்கியத்தனம்!! கையாலாகத்தனம்!! சின்னாபின்னமா செதஞ்ச என் நெலம விரோதிக்குகூட வந்திடக்கூடாதுன்னு நெனச்சுகிட்டே மூக்க சிந்திக்கிறேன் முந்தானையில....

திடீர்னு பொடனில அடிச்சாமாறி தூரமா ஒரு சத்தம் கேக்குது. அந்த சத்தம் என்னைய கீழ எறங்க சொல்றமாரியே இருக்கு, இந்த சத்தத்த இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவ தஞ்சாவூரு போனபோது கேட்டிருக்கேன். இங்க கேக்குறது இதுதான் மொத தடவ.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, என்னால ஒக்கார முடியல, கிறுகிறுங்குது, எறங்குறியா இல்லையான்னு அதட்டுற மாரி இருக்கு. நாலாம் நம்பரும் இப்போதைக்கி நகறாப்புல தெரியல.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது... எதிராளிய பாத்தா நெருப்புகோழிகனக்கா கண்ணா மூடிக்கிறேன், காத பொத்திக்கிறேன். அப்பவும் அந்த சத்தம் எனக்குள்ள ஓடவும், "ஒ"ன்னு கத்துறேன். வண்டியில இருந்த நாலஞ்சு தலையும், கண்ணாடியும் திரும்பி என்ன பாக்குதுங்க.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, என்னைய அந்த சத்தம் இழுத்து கீழ விடுது. நாலாம் நம்பர விட்டு எறங்கி ஓடுறேன். சனம் "என்னமோ ஏதோன்னு" பதறுதுக. பின்னால கொஞ்ச சனம் ஓடியாருது. நா கண்ணு முன்னு தெரியாம ஓடினதுல ஒலையில வழுக்கி விழுந்துட்டேன். இளவட்டம் ஒன்னு என்ன தூக்கி விடுது.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, வெடவெடக்குது எனக்கு. எட்டிப் பாக்குறேன். மொத்த வண்டியலும் கட்டிபோட்ட கணக்கா நிக்குறதுக்கு காரணம் பள்ளத்துல மாட்டிக்கிட்டுருக்குற ஒரு லாரின்னு புரியுது. எப்படியாவது லாரிய சீக்கிரம் நகத்த சொல்லி மொரட்டுத்தனமா கத்துறேன். சனம் மொத்தமும் அங்கயும் இங்கயும் ஓடுதுக. அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, நான் காட்டுக்கத்து கத்துறேன், ரெண்டு பொமுனாட்டிக என்ன புடிச்சு ஆசுவாசப்படுத்துதுக, தலைவிரிகோலமா நா அலர்ற சத்தத்தில அந்த எடமே அல்லோலப்படுது. பாலு மில்லு கதவ ஒடச்சு, லாரி பின்னால வரவெச்சு, சோத்துகை பக்கமா ஒடிச்சு நேரா போக வெக்குது சனம்,

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, நா மறுபடி அலற, நாலாம் நம்பரையும் சேத்து அங்க நின்ன எல்லா வண்டியலும் அவசரகதியா நவவந்திடுச்சு. சத்த நாழியில அந்த எடமே காலியாவ, நான் ஒத்தையா நின்னுகிட்டு இருக்கேன்.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கொஞ்சம் கொஞ்சமா கிட்ட வந்து என்னைய தாண்டி போவுது. என்னெமோ தெரியல அந்த சத்தம் போட்டுக்கிட்டு வந்த வண்டியோட பின்னாடி பக்கம் குறுக்குலயும், நெடுக்குலயும் போட்டிருந்த செவப்பு குறிய பாத்ததும் என் கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப் பாக்குது... மழ "சோ"ன்னு பேஞ்ச்சுகிட்டு இருக்கு...

Monday, February 9, 2009

"நான் கடவுள்"- ரெளத்ர தாண்டவம்.

"நான் கடவுள்" பாலா+இளையராஜா +ஆர்யா கூட்டணி ஆடியிருக்கும் ரெளத்ர தாண்டவம். "சேது" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தை வேறு பாதைக்கு இழுத்து சென்றவர் இயக்குநர் பாலா. இந்திய திரையுலகமே வியக்கும் இயக்குநர் மணிரத்னம், அவர் வியந்த தமிழ் இயக்குநர் பாலா. இன்றைய தமிழ் சினிமாவில் புது முயற்சிகள் செய்ய துணியும் இயக்குநர்களிடம் கண்டிப்பாக பாலாவின் பிரதிபலிப்பை காணலாம். இப்பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான பாலா மூன்று வருடகாலமாக உழைத்து செதுக்கியதே இந்த "நான் கடவுள்". தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்காத பக்கங்களை, தன் படைப்புகளில் கொண்டுவருவதே பாலாவின் திறமை. நமக்கு புலப்படாத நம் கண்ணுகெட்டின தூரத்தில் வாழும் பிச்சைக்காரர்களின் வாழ்வியலையும், நம்மில் பலர் பார்த்திராத புனித காசியின் சூழலையும் பிணைத்து நம்மை உறைய வைக்கிறது இந்த "நான் கடவுள்" படைப்பு.

ஜோதிடக்காரனின் பேச்சைக்கேட்டு பதினாலு வருடம் தனது மகனை பக்கத்தில் வைக்கக்கூடாது என்பதற்காக காசியில் கொண்டுபோய்விட்ட தந்தை, பதினாலு வருடம் கழித்து அவனை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வருகிறார். வீட்டினரோடு ஒட்டாமல் நான் கடவுள் என்று திரிகிற அவன், வாழ தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் தண்டனையும், வாழ இயலாதவர்களுக்கு கொடுக்கும் வரமுமே படம்.

அஜீத், மீரா ஜாஸ்மின், பாவனா, கார்த்திகா என பலர் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விலக்கப்பட்டனர். கடைசியில் ஆர்யா, பூஜாவிற்கு கிடைத்தது இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு. இனி இவர்கள் வாழ்நாளில் இவர்கள் மறக்கமுடியாத வாய்ப்பு.

ஆர்யா, பூஜா, ஆர்யாவின் தாய் உள்ளிட்ட ஒரு சிலரே ஏற்கனவே நமக்கு அறிமுகமான நடிகர்கள், மற்றவர்கள் யாவரும் புதுமுகங்கள். குறிப்பாக தமிழ் திரையுலகம் எப்போதும் கேலிக்கூத்தாக சித்தரிக்கும் திருநங்கை கதாப்பாத்திரத்தில் நிஜ திருநங்கை.

வளர்ந்த தலைமுடி, முகம் நிறைய தாடி, கஞ்சா, கண்களில் மிரட்டும் பார்வை என ஆர்யாவை கண்டதும் படத்தில் வருகிற கதாபாத்திரங்கள் மட்டுமல்ல நாமும் பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் அறிமுக காட்சியில் தலைகீழாக நிற்கும்போதும், கஞ்சா அடிக்கையிலும், மற்றோரை மிரட்டுகையிலும் ரொம்பவே மிரட்டி இருக்கிறார். அதிகம் வசனம் இல்லாத இந்த கதாபாத்திரத்தை இனி கண்டிப்பாக ஊர் பேசும். மூன்றுவருடம் காத்திருந்ததற்கு நல்ல பலன் என்பது படம் முடிகையில் தெரிகிறது.

அடுத்ததாக பூஜா, இனி ஒரு கதாப்பாத்திரம் இப்படி இவருக்கு திரையுலகில் அமைவது மிக மிக கடினம். நிஜ ஊனமுற்றோர்களுக்கு மத்தியில் இவரும் இரண்டர கலந்திருப்பதே இவரின் கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி. அதுவும் கடைசி காட்சியில் அவரை நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் பாலா.

இந்தப் படத்தில் அடுத்ததாக குறிப்பிட வேண்டியது பிச்சை எடுக்க வைக்கப்படும் அந்த ஊனமுற்றவர்களின் கதாப்பாத்திர படைப்புகள் மற்றும் நடிகர்கள். விதவிதமான வேடங்களில் நம்மை தொந்தரவு செய்து பிச்சை எடுப்பர்களின் சூழல் நம்மை உறைய வைக்கும் அளவிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக இளையராஜாவின் பிண்ணனி இசை, மிரட்டுகிறபாணியில் ஆர்யா நடந்து வருகையிலும், உடுக்கையோடு ஆர்யா செய்யும் அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும் ராஜா பிண்ணி எடுத்திருக்கிறார். ஒலிநாடாக்களில் கேட்ட "மாதா உன் கோவிலில்" பாடல் படத்தில் பயன்படுத்தபடவில்லை என்றபோதும், "ஓம் சிவ ஓம்" பாடலும், அதை பதிவு செய்த விதமும் அருமை.

ஆர்தர் வில்சனின் கேமரா காசியை படம்பிடித்தவிதம், ஆர்யாவின் அறிமுக காட்சி, கடைசி சண்டைக் காட்சி என நீட்டிக்கொண்டே போகலாம் இவர் நிருபித்த இடங்களை. கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியின் கலையும் ரொம்பவே கை கொடுத்துள்ளது. முக்கியமாக அந்த பிச்சை எடுப்பவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த இடம்.

வெகுஜன சினிமாக ரசிகர்களை இது இழுக்குமா என்பதற்கு விடைதெரியாவிட்டாலும், கலை ரசிகர்களுக்கு நல்ல ரசனையான படைப்பு. தமிழ் சினிமா மார்த்தட்டிக்கொள்ள வேண்டிய முக்கியமான படைப்பு.

Monday, December 8, 2008

"அவள் பெயர் தமிழரசி"வித்தியாசமான புகைப்பட விளம்பரங்களின் மூலம் சமீபத்தில் தமிழ் திரைப்பட ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறது 'அவள் பெயர் தமிழரசி' திரைப்படம். அழகான தமிழ் பெயருடன், தலைப்பிலேயே கவிதையான கதை ஒன்றை சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் மீராகதிரவன் பாலு மகேந்திரா , தங்கர்பச்சான், லோகித்தாஸ் பட்டறைகளில் வித்தை கற்றவர். சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணல் இது...

“உங்கள் படைப்பு பற்றி...”
"மனதில் அடியாழம் வரை போய் தன் நினைவுகளை மீட்டெடுக்கிற, அதற்குப் பதில் தேடி திரிகிற இளைஞனின் பயணம்தான் 'அவள் பெயர் தமிழரசி'. முழுக்க முழுக்க நாட்டுப்புறக் கலைகளின் கைப்பிடித்துக் கதை சொல்லப் போறோம். 'காதல்', 'வெயில்', 'பருத்தி வீரன்', ‘சுப்பிரமணியபுரம்' வரிசையில் 'தமிழரசி'க்கு ஓர் இடம் கிடைக்கணும்னு இஷ்டப்பட்டு கஷ்டப்படுறோம். கிடைக்கும்!"

"அவள் பெயர் தமிழரசி"ன்னு பெயரே கவிதையா இருக்கே?"
"நன்றி! 'யாரடி நீ மோகினி', சந்திரமுகி'ன்னு பெயர்களைப் பார்த்தால் கதாநாயகியின் சுப்ஜெக்ட் போல தோணூம். ஆனால், இரண்டும் கதாநாயகனின் பார்வையில் நகரும் கதை. இந்தத் தலைமுறை எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. கிராமியக் கூத்தில் நாம் தொலைத்தவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். அதை தேடி எடுக்கிற முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.

ஒரு நிமிடம், ஒரு சம்பவம், ஒரு வார்த்தை உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். 'நாம் அதைச் செய்திருக்கக் கூடாதோ'னு குற்ற உணர்வு வாழ்நாள் முழுவதும் குத்திக் குடைந்து கொண்டே இருக்கும். நமது ஒவ்வொரு செயலும் ஒருவருக்கு நன்மையாகவும் இன்னொருவருக்கு தீமையாகவும் முடியும். உண்மையில் இந்த நன்மை, தீமைகளை நாம் திட்டமிடுவது இல்லை. அது இயல்பாக நடக்கிற ஒன்று. கொஞ்ச நாட்கள் கழித்து 'இது நன்மை', ' இது தீமை'ன்னு அசைபோடுகிற காலத்தின்போது சிலர் செய்த தீமைகளுக்குப் பிராயச்சித்தம் தேடுகிறோம். மனிதன் கடவுளாக மாறிய ஒருவனின் காதல் கதை இது. வற்றிப்போன எல்லா நதிகளின் ஆழத்திலும் எங்கோ ஒரு சொட்டு ஈரம் தேங்கி கிடக்குமே... அந்த ஈரத்தின் சுவையை தமிழரசி உணர்த்துவாள்"

"இந்தக் கதைக்கு ஜெய் எப்படிப் பொருத்தமாக இருக்கிறார்?"
" 'சுப்பிரமணியபுரம' படம் பண்ணும்போதே அவரை இந்தக் கதைக்கு உள்ளே கொண்டு வந்திட்டோம். அவரைப் போல வெற்றிப் படம் கொடுத்தவர்கள் உடனடியா ஆக் ஷன் படம் பண்ணக் கிளம்பிருவாங்க. ஆனால், விதிவிலக்கா ஜெய் தேர்ந்தெடுக்கிற எல்லாப் படங்களும் தீவிரமான கதைகளாகவே இருக்கிறது. ப்ளஸ் டு படிக்கிற மணவனாக உடம்பைக் குறைத்ததும், கேரக்டரின் வலியைத் தன் வலி மாதிரி சுமந்து நடித்ததும் சினிமா மீதான ஜெய்யின் அக்கறைக்குச் சாட்சி. அது போதும் என் கதையின் நாயகனுக்கு"

"தமிழரசி"
"என் தமிழரசிக்காகக் கிட்டத்தட்ட 600 பெண்களைச் சந்தித்திருப்பேன். ஒண்ணு, கோதுமை நிற மார்வாடிப் பெண்கள் சிரிக்கிறாங்க. இல்ல, செக்கச்செவேல் கேரளப் பெண்கள் வெட்கப்படுறாங்க. என்ன செய்யிறதுன்னு புரியாம சின்னத் திகைப்பு உண்டான சமயம்தான் நந்தகி கண்ணில் பட்டார். தமிழ்நாட்டின் அசல் கிராமத்தைச் சேர்ந்த பெண். தமிழும் தமிழ் உணர்வுகளும் தமிழரசி கேரக்டருக்குப் பாந்தமாகப் பொருந்தினார். எனக்கு தமிழரசியும் தமிழ் சினிமாவுக்கு நல்ல கதாநாயகியும் கிடைத்துவிட்டார்.

"படத்தில் வேற என்ன விசேஷம்?"
"ஓவியர் வீரசந்தானம், சமூக சிந்தனையாளர் தியோடர் பாஸ்கரன் போன்ற திறமையானவர்களை இதுநாள்வரை தமிழ் சினிமா பயன்படுத்தவில்லை என்கிற கோபம் எனக்கு உண்டு. அந்தக் கோபத்தை என் படத்திலேயே தீர்த்துக்கொண்டேன். கோபக்கார கலைஞரான வீரசந்தானத்தின் நடிப்பு கொடி கட்டிப் பறக்கிறது. வீர சந்தானம் ஏற்கனவே சந்தியா ராகத்தில் நடித்திருந்தாலும் சினிமாவை விட்டு நீண்ட காலமாக விலகியே இருந்தவர். இசைக்கு விஜய் ஆண்டனி. ஒரு மாற்று இசைக்குத் தயாராகி, பொறுப்பை உணர்ந்து அழகான இசையை தந்திருக்கிறார். ஒரு நல்ல அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்!"


புது முயற்சிகளுக்கும், தரமான படைப்புகளுக்கும் என்றுமே தமிழில் அங்கீகாரம் உண்டு. மீராவின் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் இப்படத்தின் மூலம் கிடைத்து, மேலும் தரமான பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் உணர்வின் அடிப்படையிலானதா? உரிமைக்கானதா?

ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கை நியாயமானதா? இப்போராட்டம் உணர்வின் அடிப்படையிலான போராட்டமா? அல்லது உரிமைக்கான போராட்டமா? இந்த கேள்விகளுக்கு தெளிவானதொரு வரலாற்று உண்மை புரிதல் அவசியமாகிறது.

பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்ட பாரதம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இன்றைய இந்தியாவாக எவ்வாறு ஒரே நாடாக்கப்பட்டதோ, அதேபோல் இன்றைய இலங்கையில் தனி கலாச்சார அடையாளங்களுடன், தனி தனி மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் பகுதியும், சிங்களப் பகுதியும் பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்ட பிறகே ஒன்றாக்கப்பட்டு லங்கை தீவு என்றழைக்கப்பட்டது. (இலங்கையின் பூர்விக குடிமக்கள் தமிழர்கள் மட்டுமே என்றும், சிங்களவர்கள் அதன் பின்னரே குடியேறியவர்கள் என்றும் வரலாறு கூறுகிறது)

கி.பி.1505 முதல் கி.பி1656-வரை போர்த்துகேயராலும், கி.பி1656 முதல் கி.பி.1796 வரை ஒல்லாந்தராலும் ஆளப்பட்ட இத்தீவை, பிரித்தானியர்கள் கி.பி.1796-ல் கைப்பற்றினர். இங்கு அடுத்த சிக்கல் ஆரம்பமானது. கி.பி.1820-ல் சீனாப்பட்டி என்ற ஊரில் கோப்பி பயிர் செய்யும் முயற்சியில் வெற்றி கண்டு, அதன்மூலம் அதிக லாபம் ஈட்டியவர்கள், இன்னும் அதிக அளவில் கோப்பி பயிர் செய்ய விரும்பினர். இத்தொழிலில் அங்கு வாழ்ந்த சிங்களவர்கள் ஈடுபட மறுத்ததனால், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டுவர திட்டமிட்ட பிரித்தானியர்கள், இன்றைய தமிழகத்து தமிழர்களிடம் ஆசைகாட்டி ஆயிரக்கணக்கில் ஆண்களையும் பெண்களையும் அழைத்து சென்று, மலையக பகுதியில் அடிமைகளாக்கினர்.

நிலப்பிரப்புகளின் கொடுமைகளில் தாங்கவியலாத வேதனையை அனுபவித்தும், சமுதாய ஒழுங்கு முறைகளால் அந்நியப்படுத்தப்பட்ட நிலையிலும், தீண்டாமைக் கொடுமையினாலும் பாதிக்கப்பட்ட தலித்துக்களும், குடும்ப பாரம்பரிய வக்கிரத்தனத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களே பெரும்பாலும் அவர்களின் ஆசைவார்த்தைகளில் மயங்கி அங்கே அடிமையாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கி.பி.1823-ல் தொடங்கி கி.பி.1939 ஆண்டு வரை தொடர்ந்தது எனலாம்.

கி.பி.1948 பிப்ரவரி நான்காம் திகதி பெருமபான்மை இனமான சிங்களவர்களிடம் பிரித்தானியர் ஆட்சியை ஒப்படைக்க, அரியணையில் ஏறிய சிங்கள அரசு 15.11.1948-ல் இம்மலையக தமிழர்களின் (தமிழகத்திலிருந்து குடியேறிவர்களின்) குடியுரிமையை பறித்து அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கியது. பிரித்தானியர்களின் அடிமை விலங்கிலிருந்து விடுபட்டவர்களை இக்குடியுரிமை பறிப்பு சட்டம் ஓட ஓட விரட்டியது.

அதன் பின்னர் 5.6.1956-ல் தனி சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட, அத்தீவின் பூர்வீக குடிகளான இலங்கைவாழ் தமிழர்களை உலுக்கியது. பாத யாத்திரை, கறுப்புக்கொடி போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என தொடர்ந்த அறப்போராட்டங்களில் முன்னணி அரசியல் தலைவர்கள், பொது மக்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்த தமிழினம் ஒன்றுபட 30.3.1958-ல் மொழி உரிமை போரில் அய்யாவு, பிரான்ஸிஸ் என்ற இரு தமிழர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது.

பண்டா ஸெல்வா உடன்படிக்கை(26.07.1957), சிறிமாஸாஸ்திரி ஒப்பந்தம்(30.10.1964), டட்லி- செல்வா உடன்படிக்கை(24.03.1965), கி.பி.1970-ல் நிறைவேற்றப்பட்ட தரப்படுத்துதல் கொள்கை, புதிய குடியரசு அரசியல் சட்டம்(22.05.1972) என ஒவ்வொன்றும் தமிழர்களின் அகிம்சையை தோற்கடிக்க, தமிழர் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்கள் தீவிரமாக போராட்டத்தில் குதித்தனர்.

வெறிகொண்ட இலங்கை அரசு, அவ்விளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக சிறைப்படுத்தி சித்ரவதை செய்ய ஆரம்பித்து கொல்ல. காடுகளில் அவ்விளைஞர்கள் தஞ்சம் புகுந்து போராட ஆரம்பித்தனர்.

காட்டில் இருந்து போடாடிய குழுக்களை நெருங்க முடியாத இலங்கை அரசு தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கென அப்பாவி தமிழ் மக்களை அழிக்கத் தொடங்கியது. ஷெல்லடி, கற்பழிப்பு, கட்டாய சிங்கள குடியேற்றம் என தமிழ் இனத்தை கூண்டோடு அழிக்க திட்டமிட்டு செயல் படுத்தியது.. தமிழ் மக்கள் தங்களை காத்துக் கொள்ள அண்டை நாடுகளுக்கு புலம்பெயர ஆரம்பித்தனர்.

அடிக்க அடிக்க போராளி குழுக்கள் வலிமை அடைந்தது. தமிழீழ விடுதலை புலிகள்(LTTE), தமிழீழ விடுதலை இயக்கம்(TELO), ஈழ புரட்சி அமைப்பு(EROS), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF) என பல குழுக்களாக போராடிய குழுக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி கலைக்கப் பார்த்த இலங்கை அரசுக்கு, சூழ்ச்சியை வென்ற தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் இன்றும் இலங்கையையும், அதற்கு ஆதரவாக செயல்படும் நாடுகளின் தொழில்நுட்பங்களையும் ஆட்டம் காண வைக்கிறது.

ஆக உரிமைக்கான போராட்டமாகவே உருபெற்ற இப்போராட்டம், இன்றும் உரிமைக்கான போராட்டமாகவே தொடர்கிறதே என்பதே நிசப்தம். இதனை தமிழீழ போராட்டதை ஊர்ந்து கவனிக்கும் யாவரும் நன்கு அறிவர்.

இன்று யாழ்பாணம், வன்னி, மட்டக்களப்பு இணைந்த வட கிழக்கு மாகாணங்களை இணைத்துதான் தனி தமிழீழம் அமைக்க முப்படை கொண்ட முதல் போராளி இயக்கமான தமிழீழ விடுதலை புலிகள் போரடி வருகின்றனர். இந்நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள், யாழ்பாணம், மன்னார் ,அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் தமிழீழ விடுதலை புலிகள் வசமுள்ளது.

கல்வி, மருத்துவம், காவல், நீதி என முக்கிய நிர்வாகங்களின் மூலம் ஒரு அரசாங்கமே இங்கு நடக்கிறது. 6 அடுக்கு நீதிமன்றங்கள், 16 ஆண்டுகளாக சட்ட கல்லூரி, பள்ளிகளிலும் மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளிலும் தமிழ் வழியில் கல்வி, வேளாண்மை பண்ணைகள் மூலம் விவசாயம், தமிழீழ வைப்பகம்(வங்கி), ஆதரவற்றோர் வாழ செஞ்சோலை என நிர்வாகம் சிறப்பாக திட்டமிட்டு செயல்பட, வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தினால் தண்டணை, சாதி விடு சாதி கல்யாணம் செய்வதை எதிர்த்தால் தண்டனை என நீதி செம்மையாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

“இந்தியா வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்றபோதும், அர்த்த ராத்திரியில் எந்த பயமும் இன்றி ஒரு பெண்ணால் எப்போது சுதந்திரமாக நடமாட இயல்கிறதோ அன்றுதான் உண்மையிலேயே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக பொருள்” என்பது நம் தேசபிதா காந்தியின் தத்துவம். உலகில் வல்லரசாக உருமாறி வரும் இந்தியாவால் கூட இன்றுவரை சாதிக்க இயலாத இச்சாதனையை தமிழீழம் படைத்துக்கொண்டிருக்கிறது. தமிழீழ வீதிகளில் திருட்டு பயமில்லை, பிச்சைகாரனின் தொந்தரவில்லை. நடு ரத்திரியில் ஆட்கள் நடமாட்டமில்லா தெருக்களில் ஒரு பெண்ணால் நடமாட முடிகிறது. கட்டுக்கோப்பான நிர்வாகத்திற்கு இது சான்று.

ஆக ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் தமிழீழ விடுதலை புலிகளால் முன்னெடுத்து செல்லப்பட்டு தனி அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையில், இவ்வரசாங்கத்தை உலகத்தால் அங்கீகரிக்கப்பட வைக்கவும், எஞ்சிய தமிழர் பகுதிகளை மீட்கவுமே தமிழீழ விடுதலை புலிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழீழத்தை அங்கீகரிக்க சொல்லி முதல் குரலாக விடுதலை சிறுத்தைகள் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கது.

Monday, December 1, 2008

"வெயிலோடு போய்", "பூ"வாக மலர்ந்திருக்கிறது!தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை தேர்வுசெய்து வெற்றி பெற்றவர்களில் மிகவும் குறுப்பிடத்தக்கவர் தோழர் ச.தமிழ்செல்வன். அவரின் படைப்புகளில் "வெயிலோடு போய்"சிறுகதை உணர்வு ரீதியான முக்கியப் படைப்பு. தமிழ் சினிமா இதுபோல் தரமான பதிவுகளை அத்தி பூத்தாற்போல் எப்போதாவது எட்டிப்பார்க்கும். இயக்குநர் சசி உருவாக்கத்தில் "ம்"என பெயரிடப்பட்டு தற்போது "பூ"என பெயர் மாற்றத்தோடு "வெயிலோடு போய்" சிறுகதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளது.

ச.தமிழ்செல்வனின் சிறுகதை உணர்விலிருந்து சிறிதும் பிசகாமல், அச்சிறுகதையின் தாக்கத்தை படம் நெடுக வழியவிட்டு கண்களில் நீர் கசிய வைக்கிறது இத்திரைப்படம். நீண்ட......இடைவெளிக்கு பிறகு பெண் கதாப்பாத்திரத்தை மையைப்படுத்தி ஒரு தமிழ் சினிமா. தமிழ் சினிமாவுக்கு ஏற்கனவே பரீட்சயமான சிறிகாந்த், மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகியுள்ள பார்வதி, தோழி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் "ஒன்பது ரூபாய் நேட்டு" புகழ் இன்பநிலா இவர்களை தவிர மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் (வாழ்ந்திருக்கும்) அனைவரும் புதுமுகங்கள் என்றபோதும், எந்த ஒரு சிறு கதாப்பாத்திரமும் அதன் உணர்விலிருந்து இம்மியும் விலகாமல் கையாளப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது.

பார்வதி தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் இன்னொரு மலையாள சேச்சி என்றபோதும், அச்சு அசல் அந்த மாரி கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தங்கராசுவை மறந்திடு என்றபோது தனது உயிர் தோழியை கல்விட்டு அடிப்பது, பின்பு மனம் மாறி அவளை சமாதனம் செய்வது, துணிமாற்றுகையில் தன்னை பார்த்துவிட்டான் என தெரிந்தபோது அந்த கண்ணாடிகாரனை அடித்து துவம்சம் செய்வது, “கண்ணாடி போடாவிட்டால் கண் சரியாக தெரியாது, நான் உன்னை பார்க்கையில் கண்ணாடி போடவில்லை” என அவன் கெஞ்சியதும் வாய்விட்டு சிரிப்பது, தன்னை திருமணம் செய்துக்கொள்ளாத மாமன் மகன் தங்கராசு திருமணத்திற்கு போகவேண்டும் என அடம் பிடிப்பது, நீ வேரொருவனை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தால் போகலாம் என அண்ணன் கட்டைளையிட உடன் சரி என ஒப்பு கொள்வது, மாமன் மகனின் சந்தோஷத்திற்காக தன்காதலை விட்டுக்கொடுத்தவள் அவன் வாழ்க்கை சரியாக அமையவில்லை என தெரிந்தபோது உடைந்து அழுவது என நடிப்பில் பல பரிமாணங்களை காட்டியிருக்கிறார்.

கதையில் அடுத்த முக்கியமான கதாபத்திரம் சிறிகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும், பிரளயனின் "சென்னை நாடக"குழுவைச் சேர்ந்த ராமு-வின் கதாப்பாத்திரம். தான் கண்ட கனவு பலிக்காமல் போய்விடுமோ என்கிற இடத்தில் ராமு உடைந்துபோவதும், கிளைமாக்ஸில் மாரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் இடங்கள்.

சிறுகதையின் இறுதி காட்சியை சிதைக்காமல் அப்படியே பயன்படுக்தி இருப்பது வித்தியாசமான உணர்வை வெளிக்காட்டியிருக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் "சூ சூ மாரி" , "பாசமொழி பேசும்", "ஆவாரம் பூ" பாடல்களில் மிளிர்கிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அப்பட்டமான கிராமிய சூழலையும், கால மாற்றங்களையும் கண்முன் நிறுத்தியிருக்கிறது. மேலும் கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் என மொத்த குழுவின் உழைப்பும் படம் முழுக்க தெரிகிறது. மொத்தத்தில் "பூ" இயக்குநர் சசிக்கு ஒரு முக்கியமான பதிவு, தமிழ் சினிமாவில் ஒரு தரமான பதிவு.

Thursday, October 30, 2008

மறுகலவை(ரீமிக்ஸ்) பாடல்கள் - மறுபதிவு(ரீமேக்) படங்களின் தேவை என்ன?

மறுகலவை பாடல்கள், மறுபதிவு படங்கள் தேவைதானா? ஆம் என்கிறது வழக்கம்போல நமது திரைப்பட கும்பல். அனேகமாக "குறும்பு" திரைப்படத்தில் வந்த "ஆசை நூறுவகை" பாடல்தான் இன்றைய மறுகலவை கொலைகளுக்கு பிள்ளையார் சுழி என நினைக்கிறேன்.

மறுகலவை என்றால் என்ன? ஏற்கனவே இசையமைக்கப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் கேட்டு கேட்டு நமது வாழ்வியலோடு கலந்து போன பாடல்களின் (அதிகமாக இளையராஜா பாடல்கள்) மெட்டை எடுத்து நோகாமல் நொங்கு திண்பதுபோல் புதிய பாடல் ஆக்குவது. பழைய ரசனை கெடாமல் இப்பாடல்கள் இருந்தாலாவது கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம், மாறாக நம்மை கொலையல்லவா செய்கிறது.

இசைஞானி தனது பழைய பாடல்களை ( மன்றம் வந்த - மெளன ராகம், விழியிலே - நூறாவது நாள், குழலூதும் கண்ணனுக்கு - மெல்ல திறந்தது கதவு) மெருகேற்றி அதன் இயற்கை தன்மை கெடாமல் அமிதாப் நடித்த "சீனி கம்" என்ற இந்தி படத்தில் பயன்படுத்தி இருந்தார். மேலும் ராம் கோபால் வர்மா-வின் தமிழ் படமான "உதயம் 2008"-ல் "பன்னீர் புஷ்பங்கள்" திரைப்படத்தில் இடம் பெறும் "ஆனந்த ராகம்" பாடலை மெருகேற்றி "என் நெஞ்சின் ராகம்" என்ற பாடலில் பயன்படுத்தி இருந்தார். இங்கே கவனிக்க வேண்டிய செய்தி, இசைஞானியின் அந்த பழைய மெலடி பாடல்கள் நம்மை எந்த அளவிற்கு கட்டிப்போட்டதோ அதை விட ஒரு பங்கு மேலே இந்த பாடல்கள் கட்டிப்போட்டன என்பது அப்பாடல்களை கேட்டு ரசித்தோருக்கு புரியும். இந்த ஆரோக்கியமான மறுகலவை பாடல்களை நாம் கண்டிப்பாக ஒப்பு கொள்ளலாம்.

மற்ற இசையமைப்பாளர்களின் மறுகலவை பாடல்களை கவனியுங்கள், அந்த பழைய பாடலில் இருந்த ரசத்தை துடைத்து குப்பையில் போட்டுவிட்டு, மொத்த குப்பையையும் பாடலில் சேர்த்து மறுகலவை பாடலாக்கிவிடுகிறார்கள். ஆறாம் வகுப்பில் ஆங்கில பாடத்தின் கட்டுரையை மனப்பாடமாக்கி ஒப்புவிக்கும் மாணக்கர்களை போல் இன்றைய ரசிகர்கள் ஆங்கிலப்படுத்தப்படும் இந்த தமிழ் மறுகலவை பாடல்களை பாடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆங்கில தொகுப்பு பாடல்களை(ஆல்பம்) அப்பட்டமாக அடித்து கைத்தட்டல் வாங்கி பார்த்தார்கள் ஒரு காலத்தில், ஆனால் இன்று அந்த இசையமைப்பாளர் ஒரு தொகுப்பு பாடலை கேட்பதற்கு முன் இங்கே ஆயிரம் பேர் கேட்டு விடுவதால், மீசையில் கூழும் ஒட்டாமல், குடித்தும் விட வேன்டும் என்றென்னும் இவ்விசையமைப்பாளர்கள் இந்த இசை கொலைகளில் அரங்கேற்றிவிடுகின்றனர்.

அடுத்ததாக மறுபதிவு படங்கள். . . .ரஜினி நடித்து வெளிவந்த "பில்லா" திரைப்படம், அஜீத்தை வைத்து மறுபதிவு செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற, ஒரு டஜன் ரஜினி திரைப்படங்கள் தற்பொழுது மறுபதிவு செய்யப்பட்டு வருகிறது. ஏன்? இசையமைப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அதே நிலைமாதான் இவர்களுக்கும்! ஆங்கில பட குறுந்தகடுகளை உல்டா செய்து உலகத்தர படங்களை (அவங்க சொல்றத நம்பாதீங்க) எடுத்துவிட்டதாக பூரித்துக் கொள்ளும் இவர்களுக்கு முன்னரே இப்பொழுது ரசிகர்களை உலக சினிமாக்கள் வந்தடைந்துவிடுகிறது.

உட்கார்ந்து யோசித்த கும்பல் இந்தியில் மறுபதிவு செய்து வெற்றி பெறும் வாய்ப்பாட்டை பிடித்து கொண்டது. (அப்பறம் எப்படி தமிழ் சினிமா உருப்படும்?) மக்களின் ரசனையை மழுங்கடித்த அதே ரஜினி வாய்ப்பாட்டு படங்கள் மீண்டும் கோலிவுட்டில். அதாவது ரசிகர்களின் ரசனையை கோவணோத்தோடு ஓடவிட்ட படங்களை மறுபதிவு சென்று ஜட்டியோடு ஓடவிடுகின்றனர்.

மங்கி கிடக்கும் தமிழ் சினிமா ரசனையை மாற்றும் எண்ணம் இவர்களுக்கு துளியும் இல்லை. மாற்று சினிமாவிற்கான வழிகள் ஆயிரம் உள்ளது. பயம்...பயம்... பயம்... இப்படி பயந்து பயந்து தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மழுங்கடித்துவிட்டனர்.

ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒன்றுக்கும் உதவாத அந்த படங்களை மீண்டும் மறுபதிவு செய்பவர்கள் நல்ல திரைப்படங்களின் முடிவுகளை (கிளைமாக்ஸை) ஆரம்பமாக்கி ஏன் ஒரு மாற்று சினிமாவை படைக்க கூடாது? (உதாரணமாக "அழகி" திரைப்பட தனலெட்சுமியின் அடுத்தக்கட்ட வாழ்வியல் எப்படிபட்டதாக அமைந்திருக்கும்? ரே-யின் "சாருலதா"வின் அடுத்தகட்ட வாழ்வியல் எப்படிபட்டதாக அமைந்திருக்கும்?

Monday, October 27, 2008

எனது படைப்பாக்கம் பற்றிய விமர்சனத்திற்கு....


நண்பர்களே!

எனது படைப்பாக்கம் பற்றி எனது ஆருயிர் நண்பன் எழுதிய விமர்சனத்திற்கு இங்கே சொடுக்கவும்

http://thiviyaranchiniyan.blogspot.com/2008/10/2007.htmlWednesday, October 1, 2008

பிரிவின் அர்த்தமும்... மெளன சப்தமும்...

இதய அறையில் உலாவும் வெள்ளி நிலாவிற்கு உனது மூச்சுக் காற்றின் முனகல் சத்தம். பிரிவென்பதின் அர்த்தம் இடமாற்றமல்ல, இதயத்தின் வெளியேற்றம்.


எனது பயணம் இடம் மாறித்தான், இதயத்தை வெளியேற்றியல்ல. பூக்களிலோ பாக்களிலோ ரசம் பிரிந்து மங்கின், பிணம் என்பர். நமக்கும் பொருந்துமது. நம்மின் இவ் இடைவெளி ஒருபோதும் பிரிவு ஆகா.


மணிக்கணக்கில் பேசுவதிதில்லை நேசம். தவறும் அழைப்புகளாகும் நமது கைப்பேசி அழைப்புகளின் இடமாற்றத்தில் ஒளிந்திருப்பது சலனமில்லா மெல் நீரோடையின் சலசலப்பு. அதுவே நம் உறவின் ஓசை.


ஓயாமல் பேசும் நீ ஒருதரம் என் தோள் மீது சாய்வாயே, அப்பரவச சுடர் ஒளிக்கு முன் அந்த சூரியனே தூசு. முகவரி இல்லா ஓராயிரம் கடிதங்களும் பயனற்றவைதான், வார்த்தைகளில்லாமல் வரையப்படும் என் மெளன கடிதங்களுக்கு முன்.


அதீத அன்பின் பரிமாணம் அழுகையை வரவழைக்குமாம். முற்றுப் புள்ளி வைத்துக் கொள்கிறேன் ரத்தத்தில் நனைந்து பிறந்தவனை, முத்தத்தால் வளர்த்தெடுத்தவளின் அழும் சத்தத்தை மரணித்திட செய்ய...

Wednesday, September 10, 2008

தமிழச்சி கருவறைகள்


தமிழச்சி கருவறைகள்
கூர்வாள் கொண்டிடை
விண்ணறுப்போம்!
கூரையில் சிரித்திடும்
போர்கொடி மறவோம்!!

வெக்கை நீண்ட
காட்டுக்குள்ளே
எம்வேர்கள் இறுக்கம்
எப்படித் தணியும்?

விண் நின்று கலம் அறுத்து
குலம் அழிப்பவனே
பயத்தோடும் பதுங்குகுழியோடும்
எம்வாழ்வை முடக்கிடுவோமா?
மாட்டோம்!!!

கற்புக்காக்க
கைக்குண்டேந்துவோம்!
பொற்கை காக்க
பீரங்கிப்பிடிப்போம்!!

உறக்கமென்பதை
மறக்கக் கற்பிப்போம்
இரவில் இமைகளுக்கும்!
பகலில் பாதங்களுக்கும்!!

ஆம்!!!
சாவை சந்திக்க
பிறப்பெடுத்துள்ளோம்!
உன் பகையின் பலமழிக்க!!

எம் சூரியனை உரசிடும்
போர் மேகங்களே!
சுதந்திரமே எம் இலக்கு!
சுடுகாட்டு பூச்சாண்டிதனம்
வேண்டாம்!!

தமிழச்சி வயிற்றுக்கருக்கள்
புழுக்களல்ல
நீங்கள் நசுக்குவதற்கு!
அவை புலிகள்!!

கருப்பை கதவடைக்கும்வரை
கருக்களை சுமக்கும்
தமிழச்சி கருவறைகள்!
பிறக்கும் அதன் ஒலிகள்!!

இறப்பென்பது
உன் குண்டுகள்
தீரும்வரை!
இருந்துவிட்டு போகட்டும்!!

சுட சுட
நீ சுட சுட வெடிப்போம்!
சுடுதணல் அழிப்போம்!!
விடுதலை பெறுவோம்!
அதுவரை தொடர்வோம்!!