Monday, December 24, 2012

அன்புள்ள தர்மலிங்கம் ஆசிரியருக்கு...


"உன் கட்டபொம்மன் மீசையை கொஞ்சம் டிரிம் பண்ணுடா" என யாராவது சொன்னால் எனக்கு சட்டென உங்கள் நினைவுதான் வந்து போகும்... ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே நான் உங்களிடம் ரசித்தது உங்கள் மீசையைத்தான்... இன்று கால்குலேட்டரை பயன்படுத்தாமல் கணக்கு போடும் ஒவ்வொரு முறையும், உங்களிடம் பாராட்டு வாங்க அவசர அவசரமாக கணக்கு பாடங்களை முடிக்கும் நாட்களை நினைத்து பார்க்கிறேன்... அப்பாவின் கண்டிப்பை உணராத எனக்கு முன்னுரை எழுதியது உங்கள் பூவரசமர குச்சிகள்தான்...


ஒருநாள் அம்மாவின் அலைபேசி ஊடாக நீங்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தி வந்தது... நான் நம்மவில்லை... என் ஆளுமையின் அஸ்திவாரம் நீங்கள்... என்னில் ஒரு ஆசிரியன் எட்டிப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் நீங்கள் இருப்பதை உணருகிறேன்... அப்படியே இருந்துவிட்டு போகிறேன்...

அம்மாவின் அலைபேசி...



அம்மாவிற்கு அலைபேசி ஒன்றை சமீபத்தில் வாங்கிக் கொடுத்தேன்... தினமும் தவறாமல் அம்மாவிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது... "தம்பி பொட்டவத்திலேர்ந்து செல்லு கீழே விழுந்திருச்சுய்யா, எதுன்னா ஆயிறுமா?" "எத்தனை நாளைக்கு ஒருதரம் சார்ஜ் போடணும்?" "100 ரூபாய்க்கு போட்டா காசு எவ்வளவு ஏறும்யா?" என ஒரு குழந்தையாய் மாறி அம்மா கேள்வி கேட்கிறாள். அம்மாவின் சந்தேகங்கள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பல வேளைகளில் சிந்தனையை தூண்டுகிறது...தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு அலைபேசியை பற்றி அறிந்து கொள்ளவே அம்மா இவ்வளவு கேள்விகள் கேட்கும்போது, இந்த உலகத்தை பற்றி அறிந்துக் கொள்ள அம்மாவிடம் நான் எத்தனை கேள்விகள் கேட்டு இருப்பேன்... 
உண்மையில் அம்மாக்கள்தான் முதல் பல்கலைகழங்கள்... 
ஐ லவ் யூ அம்மா.............

அம்மாவும் செவலை மாடும்...



அம்மாவுக்கும் இந்த செவலை மாட்டிற்குமுள்ள பந்தம் அளப்பரியது. அம்மா வீட்டை பூட்டும் ஓசை கேட்டாலே 'அம்மா'வென அலறும் இந்த செவலை மாடு. அந்த அலறலில் 'என்னைவிட்டு எங்கேயடி போகிறாய்' என்ற கேள்வியும் கெஞ்சலும் பிணைந்திருக்கும். "நான் போயிட்டு வர்ற வரைக்கும் சத்தம் போடாம இருக்கணும், என்ன?" என்கிற அம்மாவின் சமாதானத்தை அது எப்போதும் ஏற்றுக் கொள்வதேயில்லை என்பதை அம்மா வெளியேறியதும் அதன் அலறலை கேட்கும் அக்கம் பக்கத்தாருக்கு தெரியும். அம்மா வீடு திரும்புகையில் 'அம்மா'வென ஆர்பரிக்கும் அதன் சத்தத்தில் சொல்லிலடங்கா ஆனந்தம் நிறைந்து கிடக்கும். 


"ஏன்ந்தா இந்த மலட்டை வெச்சுக்கிட்டு மாரடிக்கிற? பேசாம வித்துப்புட்டு, சாணி கரைச்சு போடுறதுக்குத் தோதா ஒரு சின்ன கண்ணுக்குட்டியா வாங்கிக்கோ" என சில ஆண்டுகளாக சினையாகாததைப் பற்றி யார் நினைவுறுத்தினாலும், "அப்புடியெல்லாம் சொல்லாதீக ஆயி... கண்ணுக்குட்டியிலேர்ந்து வளத்துகிட்டு வர்றேன்... அதுவும் எனக்கு ஒரு கொழந்ததானே?" என தாயாய் மாறுவாள் அம்மா. "அதோட ஒத்த கண்ணுக்குட்டிகூட கட்டுத்தறியில தங்கலல... நாலும் ஒரொரு வருஷத்தகூட தாண்டல" என என்னிடம் கண்ணீர் வடிப்பாள். "உன் சாதகத்துலதான் மாடு கண்ணு தங்காதாம், சின்னபய சாதகம் ஸ்ஸ்ட்ராங்காம்' என அத்தனை பழியையும் என்மீது போடுவாள். 



ஆனால் அத்தனை நாளைக்கு அந்த பந்தம் நீடிக்கவில்லை. மாட்டை விற்கும் ஒரு நேரமும் வந்தது. தாலி கயிறுபோல் அம்மா செவலைமாட்டிற்கு கட்டிய கயிற்றை வியாபாரி அவிழ்த்து தந்தபோது அம்மா உடைந்து போய்விட்டாளாம். 'அம்மா'வென்று அது அலறும் சத்தத்தை கேட்க துணிவில்லாமல் பெரியம்மா வீட்டிற்கு ஓடி விட்டாளாம். செவலைமாட்டை பிரிந்த சோகத்தை அம்மா அலைபேசி வாயிலாக என்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டாள். ஆனால் அம்மாவை பிரிந்த செவலை மாடு, தன் ஆதங்கத்தை யாரிடம் தீர்ததிருக்கும்??? எப்படி தீர்த்திருக்கும்??? 

என் கிழவிக்கு சமர்ப்பணம்




என் கிழவியே!!! உனக்கும் எனக்குமான இந்த உரையாடல் காணொளி, என்னைவிட உயர்வான பொக்கிஷம் என்பது உனக்கு சொல்லிதான் தெரியவேண்டுமென்பது இல்லை.

‘பாரதி’ என்கிற உச்சரிப்பில் ‘பார்வதி’ என்கிற நீ இருக்கிறாய். என் சிறுவயதில், பிடிக்க முடியாத தூரத்தில் நின்றுகொண்டு “பார்வதி என்னை பாரடி” என கிண்டல் செய்ய, “அடி வெளக்கமத்தாள” என நீ பொய்யாய் துரத்தியது இன்னும் நினைவிருக்கிறது. 

நான் பிறந்த வருடத்திலிருந்து நிலத்தை குத்தகைக்கு விடும் பழக்கம் தொற்றி கொண்டதால், என்மீதான கோபதருணங்களில் “ஏறெடுத்த தரித்திரம்” என்று என்னை திட்டித் தீர்த்து இருக்கிறாய். ஆனால்... படிப்பிலும் ஒழுங்கிலும் சிறிது பிசகினாலும் ஆர்மிக்கார அம்மா அடித்து துவைக்க ஆயத்தமாக, “அய்யோ நான் என்ன பண்ணுவேன்? என் புள்ளயலுவள கொன்னுட போறாளே” என நீ பதறுவாய். “இப்படி சப்பை கட்டு கட்டிதான் இதுகள உருப்புடாம ஆக்கிப்புட்ட” என்கிற அம்மாவின் பேச்சையும், எங்கள் மீது விழும் இரண்டு மூன்று அடிகளையும் நீ ஏற்றுக் கொள்ளும்போது, உனக்கும் சேர்த்தே நாங்கள் அழுவோம்.

சிறுவயதிலிருந்து தம்பிதான் உன் செல்லம். உன் சிற்றுண்டி பங்கில் எனக்கும் அவனுக்கும் ஒரு பங்கு கொடுப்பாய். பின்பு எனக்கே தெரியாமல் மற்றொரு பங்கு அவனுக்கு கொடுப்பாய். எப்போதாவது உங்கள் திருட்டுத்தனம் எனக்கு தெரிந்து போகும். “ ‘’யப்பா... யப்பா... மாலா கடைவரை போயி எட்டணாவுக்கு மூக்குபொடி வாங்கிட்டு வந்திட்டேன்னு’ என்கிட்ட கெஞ்சுவேல்ல? என்னைக்கு வச்சுகிறேண்டி பார்வதி” என உள்ளுக்குள் உருமி கொள்வேன். அன்றே நீ என்னிடம் கெஞ்சலாக வேண்டுகோள் வைத்து வேலை வாங்கும்போது அந்த கர்வமெல்லாம் சுக்கு நூறாகி போகும். ஆனால்..... ஒருமுறை ‘நான் சாவுறதுக்குள்ள என்ன வந்து பார்த்துட்டு போய்யா” என குழந்தையாய் மாறி அடம்பிடித்து என்னை ஊருக்கு அழைத்தாய். உன்னோடு அளவளாவிவிட்டு சென்னை புறப்பட்டபோது உன் செருவாட்டு காசுகளை எல்லாம் ஒன்று சேர்த்து ரூபாய் இரண்டாயிரத்தை என் கைகளில் நீ திணித்தாய். (அனேகமாக உன் கடைசி கையிருப்பு அதுதான் என நினைக்கிறேன்). சிறுவயதில் தம்பியின் கைகளில் திருட்டுதனமாக திணிக்கும் சிற்றுண்டி எனக்கு நியாபகம் வந்தது.

வீட்டு தாழ்வாரத்தில் முடங்கிய உன் இறுதி நாட்களில் ஒருநாள்... “கை பாக்குற வீராச்சாமியை கூட்டிக்கிட்டு வாய்யா, எத்தனை மணி நேரம் தாங்கும்னு கேட்போம்’ என்று நீ, உன் இறுதி யாத்திரைக்கு நேரம் குறித்தபோது உன் கன்னத்தில் ஓங்கி அறைந்து ‘என்னை வளர்த்து ஆளாக்கிய நீதான் என் குழந்தையையும் வளர்க்க வேண்டும் என்கிற என் ஆசையை நிராசையாக்கிவிட்டு அவ்வளவு சீக்கிரம் போக உனக்கு என்னடி அவசரம்?’ என கேட்கலாம் போலிருந்தது. ஆனால் அடுத்த நொடியே, ‘அவன் என்ன சொல்ல போறான்? இருக்கையில இருக்கும், சாவயில சாவும்னு சொல்வான்’ என்ற உன் நகைச்சுவை உணர்வு என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. 

உன்னை நான் தொலைத்து வருடம் ஒன்றாகிறது. மறைந்தவர்களெல்லாம் இறந்ததாக சொல்கிறர்கள். ஆனால் உனக்கும் எனக்கும் மட்டுமே உண்மை தெரியும், உன்னையும் என்னையும் சேர்த்து எனக்குள் நான் சுமப்பது இரண்டு ஆன்மாவென்று.

என் அன்பு தம்பியே...


என் அன்பு தம்பியே... சிறுவயதில் நீயும் நானும் எப்போதும் சண்டைகோழிகள்தான். உன்னை நான் ஒரு அடி அடித்தால், பதிலுக்கு நீ என்னை இரண்டு அடி அடிப்பாய், நான் நாலாய் கொடுப்பேன், நீ எட்டாய் தர முயற்சி செய்வாய். இதைப்பார்க்கும் அம்மா இருவருக்கும் பத்து பதினைந்து கொடுத்து அமைதியாக உட்கார வைத்து விடுவாள். 

ஒரு மழைக்காலத்தில் நம் கொடத்தடியில் காற்றில் சரிந்துபோன கொய்யா மரத்திற்கு நீயும் நானும் கருவேலம் கிளையால் முட்டு கொடுத்தோம். அப்போது உன் பாதத்தை பதம் பார்த்தது கருவேலம் முள். மருத்துவமனை செல்லும் அளவிற்கு அது உன்னை வாட்டி வதைத்தது. அந்த நாட்களில் நான் உன்னை உப்பு மூட்டையாக சுமந்து பள்ளி வரை கொண்டு சென்றேன். இதை ஒரு மழைக்காலத்தில் ஆயா நினைவுகூர்ந்து என்னை அனுசரித்து போகுமாறு அழுகையோடு உன்னிடம் வேண்டினாள்.

அவளது கூடாரத்தில் அவளுக்கு நான் பணிவிடை செய்த அவளது கடைசி நாட்களின் ஓர் இரவில், நான் உன்னை அடிப்பதுபோல கனவு கண்டு, ‘எப்பா எப்பா உன்னை கையெடுத்துக் கும்பிடுறேன்பா, அவனை அடிக்காதேப்பா. அவன் சின்ன பயல்பா" என்று கெஞ்சினாள். நான் அதிர்ந்து போனேன்.

அதன்பிறகு, அவள் நம்மைவிட்டு பிரிந்த பின்பு உனக்கும் எனக்குமான இடைவெளி குறைந்தது. இப்பொதெல்லாம் உன்னிடம் அதிர்ந்துகூட பேசுவதில்லை. நீயும் என்மீது பாசத்தை பொழிகிறாய். ‘அஞ்சு வயசில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. நீ என் வாழ்வில் கடைசி நொடிவரை என் தம்பிதான். ஏனெனில் பங்காளி பகையாளியாகும் வாய்ப்புண்டு, ஆகவே இறுதிவரை நீ எப்போதும் என் தம்பியாகவே இரு.

உன்னை உப்புமூட்டை சுமக்க வைத்த அந்த மழைக்காலத்திற்கும், நம்மை சேர்த்து வைத்த நம் ஆயாவுக்கும் இந்த மழைக்காலத்தில் நம் நன்றிகளை ஒருசேர சமர்ப்பிப்போம் வா....