Wednesday, October 1, 2008

பிரிவின் அர்த்தமும்... மெளன சப்தமும்...

இதய அறையில் உலாவும் வெள்ளி நிலாவிற்கு உனது மூச்சுக் காற்றின் முனகல் சத்தம். பிரிவென்பதின் அர்த்தம் இடமாற்றமல்ல, இதயத்தின் வெளியேற்றம்.


எனது பயணம் இடம் மாறித்தான், இதயத்தை வெளியேற்றியல்ல. பூக்களிலோ பாக்களிலோ ரசம் பிரிந்து மங்கின், பிணம் என்பர். நமக்கும் பொருந்துமது. நம்மின் இவ் இடைவெளி ஒருபோதும் பிரிவு ஆகா.


மணிக்கணக்கில் பேசுவதிதில்லை நேசம். தவறும் அழைப்புகளாகும் நமது கைப்பேசி அழைப்புகளின் இடமாற்றத்தில் ஒளிந்திருப்பது சலனமில்லா மெல் நீரோடையின் சலசலப்பு. அதுவே நம் உறவின் ஓசை.


ஓயாமல் பேசும் நீ ஒருதரம் என் தோள் மீது சாய்வாயே, அப்பரவச சுடர் ஒளிக்கு முன் அந்த சூரியனே தூசு. முகவரி இல்லா ஓராயிரம் கடிதங்களும் பயனற்றவைதான், வார்த்தைகளில்லாமல் வரையப்படும் என் மெளன கடிதங்களுக்கு முன்.


அதீத அன்பின் பரிமாணம் அழுகையை வரவழைக்குமாம். முற்றுப் புள்ளி வைத்துக் கொள்கிறேன் ரத்தத்தில் நனைந்து பிறந்தவனை, முத்தத்தால் வளர்த்தெடுத்தவளின் அழும் சத்தத்தை மரணித்திட செய்ய...

1 comment:

திவியரஞ்சினியன் said...

அன்பு நண்பனே,

வலைப்பூவிலும் நீ சாதிக்க வாழ்த்துகிறேன்.

வாசகர்களே, நண்பன் பாரதியின் ஆற்றலைக்காண கொஞ்சம் இங்கே வந்தும் பாருங்களேன்

http://thiviyaranchiniyan.blogspot.com/2008/10/2007.html