Monday, December 1, 2008

"வெயிலோடு போய்", "பூ"வாக மலர்ந்திருக்கிறது!



தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை தேர்வுசெய்து வெற்றி பெற்றவர்களில் மிகவும் குறுப்பிடத்தக்கவர் தோழர் ச.தமிழ்செல்வன். அவரின் படைப்புகளில் "வெயிலோடு போய்"சிறுகதை உணர்வு ரீதியான முக்கியப் படைப்பு. தமிழ் சினிமா இதுபோல் தரமான பதிவுகளை அத்தி பூத்தாற்போல் எப்போதாவது எட்டிப்பார்க்கும். இயக்குநர் சசி உருவாக்கத்தில் "ம்"என பெயரிடப்பட்டு தற்போது "பூ"என பெயர் மாற்றத்தோடு "வெயிலோடு போய்" சிறுகதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளது.

ச.தமிழ்செல்வனின் சிறுகதை உணர்விலிருந்து சிறிதும் பிசகாமல், அச்சிறுகதையின் தாக்கத்தை படம் நெடுக வழியவிட்டு கண்களில் நீர் கசிய வைக்கிறது இத்திரைப்படம். நீண்ட......இடைவெளிக்கு பிறகு பெண் கதாப்பாத்திரத்தை மையைப்படுத்தி ஒரு தமிழ் சினிமா. தமிழ் சினிமாவுக்கு ஏற்கனவே பரீட்சயமான சிறிகாந்த், மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகியுள்ள பார்வதி, தோழி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் "ஒன்பது ரூபாய் நேட்டு" புகழ் இன்பநிலா இவர்களை தவிர மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் (வாழ்ந்திருக்கும்) அனைவரும் புதுமுகங்கள் என்றபோதும், எந்த ஒரு சிறு கதாப்பாத்திரமும் அதன் உணர்விலிருந்து இம்மியும் விலகாமல் கையாளப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது.

பார்வதி தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் இன்னொரு மலையாள சேச்சி என்றபோதும், அச்சு அசல் அந்த மாரி கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தங்கராசுவை மறந்திடு என்றபோது தனது உயிர் தோழியை கல்விட்டு அடிப்பது, பின்பு மனம் மாறி அவளை சமாதனம் செய்வது, துணிமாற்றுகையில் தன்னை பார்த்துவிட்டான் என தெரிந்தபோது அந்த கண்ணாடிகாரனை அடித்து துவம்சம் செய்வது, “கண்ணாடி போடாவிட்டால் கண் சரியாக தெரியாது, நான் உன்னை பார்க்கையில் கண்ணாடி போடவில்லை” என அவன் கெஞ்சியதும் வாய்விட்டு சிரிப்பது, தன்னை திருமணம் செய்துக்கொள்ளாத மாமன் மகன் தங்கராசு திருமணத்திற்கு போகவேண்டும் என அடம் பிடிப்பது, நீ வேரொருவனை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தால் போகலாம் என அண்ணன் கட்டைளையிட உடன் சரி என ஒப்பு கொள்வது, மாமன் மகனின் சந்தோஷத்திற்காக தன்காதலை விட்டுக்கொடுத்தவள் அவன் வாழ்க்கை சரியாக அமையவில்லை என தெரிந்தபோது உடைந்து அழுவது என நடிப்பில் பல பரிமாணங்களை காட்டியிருக்கிறார்.

கதையில் அடுத்த முக்கியமான கதாபத்திரம் சிறிகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும், பிரளயனின் "சென்னை நாடக"குழுவைச் சேர்ந்த ராமு-வின் கதாப்பாத்திரம். தான் கண்ட கனவு பலிக்காமல் போய்விடுமோ என்கிற இடத்தில் ராமு உடைந்துபோவதும், கிளைமாக்ஸில் மாரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் இடங்கள்.

சிறுகதையின் இறுதி காட்சியை சிதைக்காமல் அப்படியே பயன்படுக்தி இருப்பது வித்தியாசமான உணர்வை வெளிக்காட்டியிருக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் "சூ சூ மாரி" , "பாசமொழி பேசும்", "ஆவாரம் பூ" பாடல்களில் மிளிர்கிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அப்பட்டமான கிராமிய சூழலையும், கால மாற்றங்களையும் கண்முன் நிறுத்தியிருக்கிறது. மேலும் கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் என மொத்த குழுவின் உழைப்பும் படம் முழுக்க தெரிகிறது. மொத்தத்தில் "பூ" இயக்குநர் சசிக்கு ஒரு முக்கியமான பதிவு, தமிழ் சினிமாவில் ஒரு தரமான பதிவு.

5 comments:

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் பாரதி,

இப்படம் வெளியாகிவிட்டதென உங்கள் பதிவு மூலமே அறிந்துகொண்டேன். விகடனில் பேட்டிகளும் புகைப்படங்களுமாகப் பார்த்து, கட்டாயமாகப் பார்க்கவேண்டுமென்ற ஆவலை மிகைக்கச் செய்த படமிது.
உங்கள் விமர்சனமும் அதனை உறுதிப்படுத்தி விட்டது.
நன்றி நண்பரே :)

Anonymous said...

நல்லதொரு விமர்சனம். நிச்சயம் வெயிலோடு போய் பார்க்க வேண்டும். தற்போதைய மசாலாக்களிலிருந்து வேறுபட்ட தரமான சினிமாவாகும் என்ற நம்பிக்கையைத் தருகிறது தங்கள் விமர்சனம்.

வாழ்த்துக்கள்.

சாந்தி

Filmmaker Bharathi said...

நன்றி தோழமைகளே!!

butterfly Surya said...

படம் பார்த்துவிட்டு எழுதுகிறேன்..

சென்னையில் 17 முதல் Film festival .. அதில் பூ படம் திரையிடப்படுவதாக அறிந்தேன்.

விமர்சன நடை அருமை..

வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

சாணக்கியன் said...

நல்ல விமர்சனம்... இந்தப் படத்தைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் தகும்.