Monday, December 8, 2008

"அவள் பெயர் தமிழரசி"



வித்தியாசமான புகைப்பட விளம்பரங்களின் மூலம் சமீபத்தில் தமிழ் திரைப்பட ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறது 'அவள் பெயர் தமிழரசி' திரைப்படம். அழகான தமிழ் பெயருடன், தலைப்பிலேயே கவிதையான கதை ஒன்றை சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் மீராகதிரவன் பாலு மகேந்திரா , தங்கர்பச்சான், லோகித்தாஸ் பட்டறைகளில் வித்தை கற்றவர். சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணல் இது...

“உங்கள் படைப்பு பற்றி...”
"மனதில் அடியாழம் வரை போய் தன் நினைவுகளை மீட்டெடுக்கிற, அதற்குப் பதில் தேடி திரிகிற இளைஞனின் பயணம்தான் 'அவள் பெயர் தமிழரசி'. முழுக்க முழுக்க நாட்டுப்புறக் கலைகளின் கைப்பிடித்துக் கதை சொல்லப் போறோம். 'காதல்', 'வெயில்', 'பருத்தி வீரன்', ‘சுப்பிரமணியபுரம்' வரிசையில் 'தமிழரசி'க்கு ஓர் இடம் கிடைக்கணும்னு இஷ்டப்பட்டு கஷ்டப்படுறோம். கிடைக்கும்!"

"அவள் பெயர் தமிழரசி"ன்னு பெயரே கவிதையா இருக்கே?"
"நன்றி! 'யாரடி நீ மோகினி', சந்திரமுகி'ன்னு பெயர்களைப் பார்த்தால் கதாநாயகியின் சுப்ஜெக்ட் போல தோணூம். ஆனால், இரண்டும் கதாநாயகனின் பார்வையில் நகரும் கதை. இந்தத் தலைமுறை எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. கிராமியக் கூத்தில் நாம் தொலைத்தவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். அதை தேடி எடுக்கிற முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.

ஒரு நிமிடம், ஒரு சம்பவம், ஒரு வார்த்தை உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். 'நாம் அதைச் செய்திருக்கக் கூடாதோ'னு குற்ற உணர்வு வாழ்நாள் முழுவதும் குத்திக் குடைந்து கொண்டே இருக்கும். நமது ஒவ்வொரு செயலும் ஒருவருக்கு நன்மையாகவும் இன்னொருவருக்கு தீமையாகவும் முடியும். உண்மையில் இந்த நன்மை, தீமைகளை நாம் திட்டமிடுவது இல்லை. அது இயல்பாக நடக்கிற ஒன்று. கொஞ்ச நாட்கள் கழித்து 'இது நன்மை', ' இது தீமை'ன்னு அசைபோடுகிற காலத்தின்போது சிலர் செய்த தீமைகளுக்குப் பிராயச்சித்தம் தேடுகிறோம். மனிதன் கடவுளாக மாறிய ஒருவனின் காதல் கதை இது. வற்றிப்போன எல்லா நதிகளின் ஆழத்திலும் எங்கோ ஒரு சொட்டு ஈரம் தேங்கி கிடக்குமே... அந்த ஈரத்தின் சுவையை தமிழரசி உணர்த்துவாள்"

"இந்தக் கதைக்கு ஜெய் எப்படிப் பொருத்தமாக இருக்கிறார்?"
" 'சுப்பிரமணியபுரம' படம் பண்ணும்போதே அவரை இந்தக் கதைக்கு உள்ளே கொண்டு வந்திட்டோம். அவரைப் போல வெற்றிப் படம் கொடுத்தவர்கள் உடனடியா ஆக் ஷன் படம் பண்ணக் கிளம்பிருவாங்க. ஆனால், விதிவிலக்கா ஜெய் தேர்ந்தெடுக்கிற எல்லாப் படங்களும் தீவிரமான கதைகளாகவே இருக்கிறது. ப்ளஸ் டு படிக்கிற மணவனாக உடம்பைக் குறைத்ததும், கேரக்டரின் வலியைத் தன் வலி மாதிரி சுமந்து நடித்ததும் சினிமா மீதான ஜெய்யின் அக்கறைக்குச் சாட்சி. அது போதும் என் கதையின் நாயகனுக்கு"

"தமிழரசி"
"என் தமிழரசிக்காகக் கிட்டத்தட்ட 600 பெண்களைச் சந்தித்திருப்பேன். ஒண்ணு, கோதுமை நிற மார்வாடிப் பெண்கள் சிரிக்கிறாங்க. இல்ல, செக்கச்செவேல் கேரளப் பெண்கள் வெட்கப்படுறாங்க. என்ன செய்யிறதுன்னு புரியாம சின்னத் திகைப்பு உண்டான சமயம்தான் நந்தகி கண்ணில் பட்டார். தமிழ்நாட்டின் அசல் கிராமத்தைச் சேர்ந்த பெண். தமிழும் தமிழ் உணர்வுகளும் தமிழரசி கேரக்டருக்குப் பாந்தமாகப் பொருந்தினார். எனக்கு தமிழரசியும் தமிழ் சினிமாவுக்கு நல்ல கதாநாயகியும் கிடைத்துவிட்டார்.

"படத்தில் வேற என்ன விசேஷம்?"
"ஓவியர் வீரசந்தானம், சமூக சிந்தனையாளர் தியோடர் பாஸ்கரன் போன்ற திறமையானவர்களை இதுநாள்வரை தமிழ் சினிமா பயன்படுத்தவில்லை என்கிற கோபம் எனக்கு உண்டு. அந்தக் கோபத்தை என் படத்திலேயே தீர்த்துக்கொண்டேன். கோபக்கார கலைஞரான வீரசந்தானத்தின் நடிப்பு கொடி கட்டிப் பறக்கிறது. வீர சந்தானம் ஏற்கனவே சந்தியா ராகத்தில் நடித்திருந்தாலும் சினிமாவை விட்டு நீண்ட காலமாக விலகியே இருந்தவர். இசைக்கு விஜய் ஆண்டனி. ஒரு மாற்று இசைக்குத் தயாராகி, பொறுப்பை உணர்ந்து அழகான இசையை தந்திருக்கிறார். ஒரு நல்ல அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்!"


புது முயற்சிகளுக்கும், தரமான படைப்புகளுக்கும் என்றுமே தமிழில் அங்கீகாரம் உண்டு. மீராவின் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் இப்படத்தின் மூலம் கிடைத்து, மேலும் தரமான பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.

4 comments:

butterfly Surya said...

me the first..

படத்தின் பெயரும் பேட்டியும் அருமை..

வாழ்த்துக்கள்..

சூர்யா
butterflysurya.blogspot.com

Filmmaker Bharathi said...

படமும் கண்டிப்பாக அருமையாக இருக்கும் என்பது திண்ணம் நண்பரே...

butterfly Surya said...

படமும் கண்டிப்பாக அருமையாக இருந்தால் மிக மிக சந்தோஷமே.

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

yeah.. definitely.. this movie would be something that we can be proud of. I am pretty confident that Director Thozhar Meera Kathiravan would make it big and wish him the best..today and always...aval peyar thamizharasi, kathir peyar solvaal...ithu uruthi...

Anbu