Monday, December 24, 2012

என் அன்பு தம்பியே...


என் அன்பு தம்பியே... சிறுவயதில் நீயும் நானும் எப்போதும் சண்டைகோழிகள்தான். உன்னை நான் ஒரு அடி அடித்தால், பதிலுக்கு நீ என்னை இரண்டு அடி அடிப்பாய், நான் நாலாய் கொடுப்பேன், நீ எட்டாய் தர முயற்சி செய்வாய். இதைப்பார்க்கும் அம்மா இருவருக்கும் பத்து பதினைந்து கொடுத்து அமைதியாக உட்கார வைத்து விடுவாள். 

ஒரு மழைக்காலத்தில் நம் கொடத்தடியில் காற்றில் சரிந்துபோன கொய்யா மரத்திற்கு நீயும் நானும் கருவேலம் கிளையால் முட்டு கொடுத்தோம். அப்போது உன் பாதத்தை பதம் பார்த்தது கருவேலம் முள். மருத்துவமனை செல்லும் அளவிற்கு அது உன்னை வாட்டி வதைத்தது. அந்த நாட்களில் நான் உன்னை உப்பு மூட்டையாக சுமந்து பள்ளி வரை கொண்டு சென்றேன். இதை ஒரு மழைக்காலத்தில் ஆயா நினைவுகூர்ந்து என்னை அனுசரித்து போகுமாறு அழுகையோடு உன்னிடம் வேண்டினாள்.

அவளது கூடாரத்தில் அவளுக்கு நான் பணிவிடை செய்த அவளது கடைசி நாட்களின் ஓர் இரவில், நான் உன்னை அடிப்பதுபோல கனவு கண்டு, ‘எப்பா எப்பா உன்னை கையெடுத்துக் கும்பிடுறேன்பா, அவனை அடிக்காதேப்பா. அவன் சின்ன பயல்பா" என்று கெஞ்சினாள். நான் அதிர்ந்து போனேன்.

அதன்பிறகு, அவள் நம்மைவிட்டு பிரிந்த பின்பு உனக்கும் எனக்குமான இடைவெளி குறைந்தது. இப்பொதெல்லாம் உன்னிடம் அதிர்ந்துகூட பேசுவதில்லை. நீயும் என்மீது பாசத்தை பொழிகிறாய். ‘அஞ்சு வயசில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. நீ என் வாழ்வில் கடைசி நொடிவரை என் தம்பிதான். ஏனெனில் பங்காளி பகையாளியாகும் வாய்ப்புண்டு, ஆகவே இறுதிவரை நீ எப்போதும் என் தம்பியாகவே இரு.

உன்னை உப்புமூட்டை சுமக்க வைத்த அந்த மழைக்காலத்திற்கும், நம்மை சேர்த்து வைத்த நம் ஆயாவுக்கும் இந்த மழைக்காலத்தில் நம் நன்றிகளை ஒருசேர சமர்ப்பிப்போம் வா....

No comments: