Monday, December 24, 2012

என் கிழவிக்கு சமர்ப்பணம்
என் கிழவியே!!! உனக்கும் எனக்குமான இந்த உரையாடல் காணொளி, என்னைவிட உயர்வான பொக்கிஷம் என்பது உனக்கு சொல்லிதான் தெரியவேண்டுமென்பது இல்லை.

‘பாரதி’ என்கிற உச்சரிப்பில் ‘பார்வதி’ என்கிற நீ இருக்கிறாய். என் சிறுவயதில், பிடிக்க முடியாத தூரத்தில் நின்றுகொண்டு “பார்வதி என்னை பாரடி” என கிண்டல் செய்ய, “அடி வெளக்கமத்தாள” என நீ பொய்யாய் துரத்தியது இன்னும் நினைவிருக்கிறது. 

நான் பிறந்த வருடத்திலிருந்து நிலத்தை குத்தகைக்கு விடும் பழக்கம் தொற்றி கொண்டதால், என்மீதான கோபதருணங்களில் “ஏறெடுத்த தரித்திரம்” என்று என்னை திட்டித் தீர்த்து இருக்கிறாய். ஆனால்... படிப்பிலும் ஒழுங்கிலும் சிறிது பிசகினாலும் ஆர்மிக்கார அம்மா அடித்து துவைக்க ஆயத்தமாக, “அய்யோ நான் என்ன பண்ணுவேன்? என் புள்ளயலுவள கொன்னுட போறாளே” என நீ பதறுவாய். “இப்படி சப்பை கட்டு கட்டிதான் இதுகள உருப்புடாம ஆக்கிப்புட்ட” என்கிற அம்மாவின் பேச்சையும், எங்கள் மீது விழும் இரண்டு மூன்று அடிகளையும் நீ ஏற்றுக் கொள்ளும்போது, உனக்கும் சேர்த்தே நாங்கள் அழுவோம்.

சிறுவயதிலிருந்து தம்பிதான் உன் செல்லம். உன் சிற்றுண்டி பங்கில் எனக்கும் அவனுக்கும் ஒரு பங்கு கொடுப்பாய். பின்பு எனக்கே தெரியாமல் மற்றொரு பங்கு அவனுக்கு கொடுப்பாய். எப்போதாவது உங்கள் திருட்டுத்தனம் எனக்கு தெரிந்து போகும். “ ‘’யப்பா... யப்பா... மாலா கடைவரை போயி எட்டணாவுக்கு மூக்குபொடி வாங்கிட்டு வந்திட்டேன்னு’ என்கிட்ட கெஞ்சுவேல்ல? என்னைக்கு வச்சுகிறேண்டி பார்வதி” என உள்ளுக்குள் உருமி கொள்வேன். அன்றே நீ என்னிடம் கெஞ்சலாக வேண்டுகோள் வைத்து வேலை வாங்கும்போது அந்த கர்வமெல்லாம் சுக்கு நூறாகி போகும். ஆனால்..... ஒருமுறை ‘நான் சாவுறதுக்குள்ள என்ன வந்து பார்த்துட்டு போய்யா” என குழந்தையாய் மாறி அடம்பிடித்து என்னை ஊருக்கு அழைத்தாய். உன்னோடு அளவளாவிவிட்டு சென்னை புறப்பட்டபோது உன் செருவாட்டு காசுகளை எல்லாம் ஒன்று சேர்த்து ரூபாய் இரண்டாயிரத்தை என் கைகளில் நீ திணித்தாய். (அனேகமாக உன் கடைசி கையிருப்பு அதுதான் என நினைக்கிறேன்). சிறுவயதில் தம்பியின் கைகளில் திருட்டுதனமாக திணிக்கும் சிற்றுண்டி எனக்கு நியாபகம் வந்தது.

வீட்டு தாழ்வாரத்தில் முடங்கிய உன் இறுதி நாட்களில் ஒருநாள்... “கை பாக்குற வீராச்சாமியை கூட்டிக்கிட்டு வாய்யா, எத்தனை மணி நேரம் தாங்கும்னு கேட்போம்’ என்று நீ, உன் இறுதி யாத்திரைக்கு நேரம் குறித்தபோது உன் கன்னத்தில் ஓங்கி அறைந்து ‘என்னை வளர்த்து ஆளாக்கிய நீதான் என் குழந்தையையும் வளர்க்க வேண்டும் என்கிற என் ஆசையை நிராசையாக்கிவிட்டு அவ்வளவு சீக்கிரம் போக உனக்கு என்னடி அவசரம்?’ என கேட்கலாம் போலிருந்தது. ஆனால் அடுத்த நொடியே, ‘அவன் என்ன சொல்ல போறான்? இருக்கையில இருக்கும், சாவயில சாவும்னு சொல்வான்’ என்ற உன் நகைச்சுவை உணர்வு என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. 

உன்னை நான் தொலைத்து வருடம் ஒன்றாகிறது. மறைந்தவர்களெல்லாம் இறந்ததாக சொல்கிறர்கள். ஆனால் உனக்கும் எனக்கும் மட்டுமே உண்மை தெரியும், உன்னையும் என்னையும் சேர்த்து எனக்குள் நான் சுமப்பது இரண்டு ஆன்மாவென்று.

No comments: