Monday, December 24, 2012

அம்மாவும் செவலை மாடும்...



அம்மாவுக்கும் இந்த செவலை மாட்டிற்குமுள்ள பந்தம் அளப்பரியது. அம்மா வீட்டை பூட்டும் ஓசை கேட்டாலே 'அம்மா'வென அலறும் இந்த செவலை மாடு. அந்த அலறலில் 'என்னைவிட்டு எங்கேயடி போகிறாய்' என்ற கேள்வியும் கெஞ்சலும் பிணைந்திருக்கும். "நான் போயிட்டு வர்ற வரைக்கும் சத்தம் போடாம இருக்கணும், என்ன?" என்கிற அம்மாவின் சமாதானத்தை அது எப்போதும் ஏற்றுக் கொள்வதேயில்லை என்பதை அம்மா வெளியேறியதும் அதன் அலறலை கேட்கும் அக்கம் பக்கத்தாருக்கு தெரியும். அம்மா வீடு திரும்புகையில் 'அம்மா'வென ஆர்பரிக்கும் அதன் சத்தத்தில் சொல்லிலடங்கா ஆனந்தம் நிறைந்து கிடக்கும். 


"ஏன்ந்தா இந்த மலட்டை வெச்சுக்கிட்டு மாரடிக்கிற? பேசாம வித்துப்புட்டு, சாணி கரைச்சு போடுறதுக்குத் தோதா ஒரு சின்ன கண்ணுக்குட்டியா வாங்கிக்கோ" என சில ஆண்டுகளாக சினையாகாததைப் பற்றி யார் நினைவுறுத்தினாலும், "அப்புடியெல்லாம் சொல்லாதீக ஆயி... கண்ணுக்குட்டியிலேர்ந்து வளத்துகிட்டு வர்றேன்... அதுவும் எனக்கு ஒரு கொழந்ததானே?" என தாயாய் மாறுவாள் அம்மா. "அதோட ஒத்த கண்ணுக்குட்டிகூட கட்டுத்தறியில தங்கலல... நாலும் ஒரொரு வருஷத்தகூட தாண்டல" என என்னிடம் கண்ணீர் வடிப்பாள். "உன் சாதகத்துலதான் மாடு கண்ணு தங்காதாம், சின்னபய சாதகம் ஸ்ஸ்ட்ராங்காம்' என அத்தனை பழியையும் என்மீது போடுவாள். 



ஆனால் அத்தனை நாளைக்கு அந்த பந்தம் நீடிக்கவில்லை. மாட்டை விற்கும் ஒரு நேரமும் வந்தது. தாலி கயிறுபோல் அம்மா செவலைமாட்டிற்கு கட்டிய கயிற்றை வியாபாரி அவிழ்த்து தந்தபோது அம்மா உடைந்து போய்விட்டாளாம். 'அம்மா'வென்று அது அலறும் சத்தத்தை கேட்க துணிவில்லாமல் பெரியம்மா வீட்டிற்கு ஓடி விட்டாளாம். செவலைமாட்டை பிரிந்த சோகத்தை அம்மா அலைபேசி வாயிலாக என்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டாள். ஆனால் அம்மாவை பிரிந்த செவலை மாடு, தன் ஆதங்கத்தை யாரிடம் தீர்ததிருக்கும்??? எப்படி தீர்த்திருக்கும்??? 

No comments: